“பொருளாதரத் தடையை” நீக்குங்கள்- பிரதமர் மோடியிடம் நேபாள துணை பிரதமர் கமல் தாபா கோரிக்கை

india nepalநேபாளத்துக்கு எதிரான ‘அதிகாரப்பூர்வமற்ற’ பொருளாதாரத் தடையை நீக்கி எரிபொருட்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அந்நாட்டு துணை பிரதமர் கமல் தாபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேபாளத்தில் மன்னராட்சி முறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மக்களாட்சி முறை அமலில் உள்ளது. உலகின் ஒரே இந்து நாடு என்ற பெருமைக்குரியது நேபாளம். இருப்பினும் அண்மையில் நேபாளத்தின் புதிய அரசியல் சாசன பிரகடனம் வெளியிடப்பட்டது. அந்த அரசியல் சாசனம் ‘மதச்சார்பற்ற நாடாக’ நேபாளத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.

இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து. மேலும் இந்திய வம்சாவளியினராகிய மாதேஸிகள், இந்த புதிய அரசியல் சாசனத்தால் தாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக்கப்பட்டுள்ளதாக கூறி போராட்டங்களை நடத்த அது வன்முறையாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து நேபாளத்தின் புதிய அரசியல் சாசனத்தில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று சில பரிந்துரைகளை இந்தியா முன்வைத்தது.

இதனை ஏற்க நேபாள அரசு திட்டவட்டமாக மறுத்தது. இதனால் மத்திய அரசு கடும் அதிருப்தி அடைந்தது. மேலும் இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு எரிபொருட்கள், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் அனைத்தும் எல்லைகளிலேயே நிறுத்தப்பட்டன. இது நேபாளத்தில் இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டது. எரிபொருட்களை வாங்க நாட்கணக்கில் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை உருவானது.

இந்த நிலைமையை சமாளிக்க சீனா மற்றும் வங்கதேசத்திடம் உதவி கோரவும் நேபாளம் முடிவு செய்திருந்தது. இந்நிலையில் நேபாள துணை பிரதமர் கமல் தாபா இந்திய அரசை சமாதானப்படுத்தும் விதமாக டெல்லி வருகை தந்தார். அவர் நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பின் போது எரிபொருட்களை ஏற்றி சென்ற டிரக்குகளை நேபாளத்துக்குள் அனுப்பி வைக்குமாறு சுஷ்மா ஸ்வராஜிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் சுஷ்மாவோ, நாங்கள் அவற்றை நிறுத்தவில்லை; எல்லையில் மாதேஸிகள் போராட்டம் காரணமாகவே நிறுத்தப்பட்டுள்ளன என்று விளக்கம் அளித்தார். மேலும் இந்திய வம்சாவளியினராகிய மாதேஸிகளின் பிரச்சனையை நேபாள அரசு தீர்க்க வேண்டும் என்றும் சுஷ்மா வலியுறுத்தினார்.

இதன் பின்னர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை கமல் தாபா சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் புதிய நேபாள அரசியல் சாசனம் குறித்தும் அவர் விளக்கம் அளித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல் தாபா, இந்த சந்திப்பு மூலம் இருநாடுகளுக்கும் இடையேயான தவறான புரிதல்களுக்கு முடிவு ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

tamil.oneindia.com

TAGS: