துபாயில் சொத்து வாங்கி குவிக்கும் இந்தியர்கள்

dubaiதுபாய் : இந்திய தொழிலதிபர்கள், இந்தியாவில் சொத்து வாங்குவதைக் காட்டிலும், துபாயிலேயே அதிகளவில் சொத்துக்களை வாங்கி குவித்து வருவது தெரியவந்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில், மட்டும், இந்தியர்கள் 14.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாக துபாய் ரியல் எஸ்டேட் நிர்வாகத்துறையின் பொது இயக்குநர் சுல்தான் பட்டி பின் மெஜ்ரென் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது,

துபாயில் அதிகளவில் முதலீடு செய்துள்ள அந்நிய முதலீடுகளில் இந்தியர்களே அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். இந்தியர்கள் 3,017 பணப்பரிமாற்றங்களின் மூலம் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளனர்.

இந்தியர்கள், பிரிட்டனில் தான் அதிகளவில் முதலீடுகளை செய்துவந்தனர். இதனிடையே துபாயில் நடைமுறையில் உள்ள ரியல் எஸ்டேட் எளிமையான முறையின் காரணமாக, இந்தியர்கள் தற்போது அதிகளவில் துபாயில் சொத்துக்களை வாங்க துவங்கியுள்ளனர்.

துபாயில் சொத்துக்களை வாங்குபவர்களுக்கு, அந்நாட்டு அரசே குடியிருப்பு விசாக்களை எளிதில் வழங்குகிறது. துபாயின் பிரபல இடங்களான துபாய் மெரினா, பிசினஸ் பே உள்ளி்ட்ட பகுதிகளில் சர்வசாதாரணமாக இந்திய மதிப்பில் ரூ. 3.45 – 6.9 கோடி மதிப்பில் வீடு உள்ளிட்ட நிலங்களை வாங்கிவிடலாம். அதே அளவுள்ள இடம், மும்பையில், ரூ. 6 முதல் 10 கோடி அளவிற்கு விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள், துபாய்க்கு பணி நிமித்தமாக, வர்த்தகம் மற்றும் சுற்றுலா தொடர்பாக வருவது சமீபகாலமாக அதிகரித்துள்ள நிலையில், வீடுகளின் வாடகை, புதுவீடுகளின் பதிவு உள்ளிட்டவை கடந்த 4 ஆண்டுகளில் 4 முதல் 7 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்சின் சென்ட்ரல் பேங்கின் முன்னாள் கவர்னர் சுல்தான் அல் சுவைதி கூறியுள்ளார்.

-http://www.dinamalar.com

TAGS: