கோலா, பெப்சியை விரட்டுவோம்… 27ம் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி முற்றுகைப் போராட்டம்

Velmurugan_tvkசென்னை: தாமிரபணியில் நாளொன்றுக்கு 9 லட்சம் லிட்டர் நீர் கபளீகரம் செய்யப்படுகிறது. நெல்லை சீமையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூறையாடும் பன்னாட்டு பகாசுர கோககோலா- பெப்சி ஆலைகளை விரட்டியடிப்போம், அக். 27-ல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: நெல்லை சீமையின் வாழ்வாதாரமாக இருப்பது தாமிரபணி நதிதான். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் குடிநீர், வேளாண்தேவைக்கான ஒரே ஆதாரமும் இந்த தாமிரபரணி நதிமட்டுமே. இந்த ஒற்றை தாமிரபரணியை மட்டுமே நம்பி 2 போக நெல்சாகுபடி உள்ளிட்ட வேளாண்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் வஞ்சிக்கும் இயற்கையால் கடந்த சில ஆண்டுகளாக தாமிரபரணி ஆற்று நீர் வரத்து குறைந்து போய்விட்டது.

இதனால் வேளாண்சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெப்சி நிறுவனமானது கங்கைகொண்டானில் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கும் ஆலையை 36 ஏக்கர் பரப்பளவில் அமைப்பதற்கான பூமி பூஜையை போட்டுள்ளது. மொத்தம் 95 ஆண்டுகளுக்கு இந்த நிறுவனத்துக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளதுடன் 1 லிட்டர் தண்ணீர் வெறும் 37 பைசாவுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பெப்சியின் இந்த ஆலை விரட்டியடிக்கப்பட்டது. இதனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்துக்குள் கால் பதிக்க முயற்சித்தது. தற்போது மீண்டும் தமிழர் நிலத்தில் பெப்சி கால் பதித்துள்ளது. நெல்லைச் சீமையின் வாழ்வாதாரமான தாமிரபரணி நீர் வேளாண்சாகுபடிக்கும் குடிநீருக்கும் போதாத நிலையில் பன்னாட்டு அன்னிய நிறுவனம் கொள்ளை லாபம் அடிக்க தாமிரபரணியை தாரைவார்ப்பது விவசாயிகளுக்கு பேரிடியாகும்.

ஏற்கெனவே கங்கை கொண்டானில் கோககோலா நிறுவனம் கால்பதித்த போது கடும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அப்போது சில உறுதி மொழிகளை அளித்துவிட்டு உற்பத்தியை தொடங்கியது கோககோலா நிறுவனம். ஆனால் இதுவரை தாம் உறுதி அளித்த எந்த ஒரு நலத்திட்டத்தையும் சுற்றுப்புற கிராமங்களுக்கு செய்து தரவில்லை கோககோலா நிறுவனம்.

இந்த நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூறையாடி வேட்டையாட புறப்பட்டிருக்கும் இந்த பன்னாட்டு பகாசூர பெப்சி ஆலையையும் மக்களை நம்பிக்கை மோசடி செய்த கோககோலா ஆலையையும் தமிழர் மண்ணில் இருந்து விரட்டி அடிக்க வரும் 27-ந் தேதி நெல்லைச் சீமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.

திருநெல்வேலி கங்கைகொண்டான் தொழில்பூங்காவை முற்றுகையிட்டு வரும் 27-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் என் தலைமையில் இந்த மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பன்னாட்டு பெருமுதலாளிகளிடம் இருந்து தமிழரின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்கான இந்த வாழ்வுரிமைப் போராட்டத்தில் ஜாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து தமிழராய் பெருந்திரளாய் பங்கேற்பீர் என அன்புடன் அனைவரையும் அழைக்கிறேன் என்று கூறியுள்ளார் அவர்.

tamil.oneindia.com

TAGS: