காந்தியவாதி சசிபெருமாளின் மரணம் குறித்து நீதி விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேவேளையில், சசி பெருமாள் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனக் காவல்துறையினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சசிபெருமாள் மரணம் தொடர்பாக அவரது மகன் விவேக் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார், அதில், எனது தந்தையின் மரணம் குறித்த உண்மை நிலையை அறிய தற்போது நீதிபதியாக உள்ள நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. பின்னர், தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கழுத்தில் கயிறு இறுகியதால்தான் சசிபெருமாள் மரணமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராகச் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு நடைபெற்று வந்தது. பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்திருந்தார்.
இந்த நிலையில், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘’சசி பெருமாள் மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை ஏற்க முடியாது. அதேவேளையில், திருநெல்வேலி டி.ஐ.ஜி., கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி., ஆகியோர் சசிபெருமாள் மரணம் குறித்த வழக்கு விசாரணையைக் கண்காணிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கு விசாரணை அதிகாரி வரும் 3 மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும். இது தவிர, இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொண்டவர்கள் வழக்கு தொடர்பாக தங்களிடம் உள்ள ஆவணங்களை விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம்’’ என்று கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
-http://www.nakkheeran.in