சகிப்பின்மை: விவாதிக்க அரசு தயார்

நாட்டில் தற்போது சகிப்பின்மை நிலவுவதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

மாட்டிறைச்சி உண்டதாக உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அண்மையில் அடித்துக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மாட்டிறைச்சி தொடர்பான சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

“ஹிந்துக்களின் கடவுளாக மதிக்கப்படும் பசுக்கள் உணவுக்காக கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும்; மாட்டிறைச்சிக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும்’ என்று பாஜக தலைவர்கள் சிலர் வெளிப்படையாகத் தெரிவித்தனர்.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், தன்னார்வ அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

ஒருவர் தனக்கு விருப்பமான உணவை உள்கொள்வதைத் தடுக்க முற்படுவது, அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படைச் சுதந்திரத்துக்கு எதிரானதாகும் என அவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

தாத்ரி சம்பவத்தையும், கர்நாடக மாநிலத்தில் எழுத்தாளர் கலபுர்கி கொலை செய்யப்பட்டதையும் கண்டித்து, நாட்டில் சகிப்பின்மை அதிகரிப்பதாக குற்றம்சாட்டி சுமார் 30 எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய விருதுகளை திருப்பி அளித்தனர். இதனைத் தொடர்ந்து, திரைப்படக் கலைஞர்கள் சிலரும் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளை திருப்பி அளித்தனர்.

இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நாடு முழுவதும் சகிப்பின்மை பரவி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
இந்தச் சூழலில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான அக்கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.

மத ரீதியில் நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயலுவதாகக் குற்றம்சாட்டியும், நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து வரும் போக்கை முடிவுக்குக் கொண்டு வர, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை குடியரசுத் தலைவர் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் காங்கிரஸ் மனு அளித்தது.

காங்கிரஸ் கட்சியின் இந்தச் செயல்பாட்டுக்கு பாஜக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மக்களை தவறாக வழிநடத்தி பாஜக ஆட்சி மீது அவப்பெயரை ஏற்படுத்தவே காங்கிரஸ் முயலுவதாக அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் தில்லியில் செய்தியாளர்கள் புதன்கிழமை

கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்து அவர் கூறியதாவது:

நாட்டில் பாஜக தலைமையிலான ஆட்சியில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாகக் கூறி காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட சிலர் போராட்டம் நடத்தி வருவது, மக்களவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிரானதாகும்.

சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். நாட்டில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியது யார்? சீக்கியர்களைக் கொன்று குவித்தது யார்? (காங்கிரஸ் ஆட்சியில் நடந்த சம்பவங்கள்) என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

அதற்காக, மாட்டிறைச்சி உண்டதற்காக ஒருவர் கொல்லப்பட்டிருக்கும் சம்பவத்தை நான் நியாயப்படுத்தவில்லை. அது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற சமூக விரோதச் சம்பவங்கள் பல்வேறு காலகட்டங்களிலும் நடைபெற்றுள்ளன.

ஆனால், ஒரு குறிப்பிட்ட ஆட்சியின் கீழ்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பது போன்ற மாயத் தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தி காங்கிரஸார் அரசியலாக்க முயலுகின்றனர்.

தற்போது சகிப்பின்மை நிலவுவதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், அதற்கு நாடாளுமன்றத்தை காங்கிரஸார் முடக்காமல் இருக்க வேண்டியது அவசியம்.

அறிவீனமான பேச்சுக்கு கண்டனம்: அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர்கள் சிலர் அறிவீனமான முறையில் கருத்துகளை வெளியிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய கருத்துகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. இதுபோன்ற பேச்சுகளை பாஜக ஒருபோதும் ஆதரிக்காது என்றார் வெங்கய்ய நாயுடு.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எப்போது?

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்த பின்னர், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரை எப்போது கூட்டுவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று வெங்கய்ய நாயுடு கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய மசோதாக்களை அரசால் நிறைவேற்ற முடியவில்லை.

எதிர்வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் அந்த மசோதாக்களை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும். குறிப்பாக, சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார் வெங்கய்ய நாயுடு.

-http://www.dinamani.com

TAGS: