எஸ்.ஐ. பதவிக்கு விண்ணப்பித்த திருநங்கை பிரித்திகா யாஷினி முழு தகுதியுடன் இருப்பதால் அவருக்கு அந்த அந்த பதவியை வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரித்திகா யாஷினி. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கான அறிவிப்பு வெளியானபோது அதற்கு பிரித்திகா விண்ணப்பித்தார்.
எனினும் திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதனால் ஏமாற்றமடைந்த அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவர் எழுத்துத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டார்.
அதில் அவர் தேர்ச்சி பெற்றாலும் அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகா தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட 100 மீ ஓட்டத்தில் பிரித்திகா வெற்றி பெற்றார்.
இந்நிலையில், பிரித்திகா யாசினி குறித்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் தமது தீர்ப்பில் கூறியதாவது, தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினிக்கு முழு தகுதி உள்ளது.
எனவே அவருக்கு எஸ்.ஐ. பணி வழங்க வேண்டும். அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார் என்று தெரிவித்தனர்.
மேலும், எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து இந்தியாவில் எஸ்.ஐ. ஆகப்போகும் முதல் திருநங்கை என்ற சிறப்பை பிரித்திகா யாஷினி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-http://www.newindianews.com
சிறந்த ஆணை…….
வாழ்த்துகள்! திருநங்கை என்று சொல்லி அவர்களை ஒதுக்குவது காலத்திற்கு ஒவ்வாதது. அவர்களும் மனிதர்கள்; அவர்களும் வாழவேண்டும்!
இது உண்மையிலேயே பாராட்ட கூடிய ஒன்று. எவ்வுயிராக இருப்பினும் நாம் மதிக்க வேண்டும் –திரு நங்கைகள் அதை வரம் கேட்டு பிறக்க வில்லை- நாம் மனிதாபிமானமாக நடக்க வேண்டும் அத்துடன் பிள்ளைகளுக்கும் பள்ளிகளில் படிப்பினையாக்கவேண்டும் = ஆனால் தமிழ் திரைப்படங்களில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நடப்பதாக காண்பிக்கப்படுவது உண்மையா? மரியாதை இல்லாமலும் தரக்குறைவாக நடப்பதே சரி என்பது போல் அல்லவா காட்டு கின்றனர்? இந் நிலையில் நல்ல ஒழுக்க வழக்கங்களை எப்படி எதிர்பார்க்க முடியும்? அங்குள்ள சமுதாயமே இதைப்பற்றி எல்லாம் அக்கறை கொள்வது இல்லை போல் அல்லவா இருக்கிறது?
வாழ்த்துக்கள்!