ஆந்திராவில் செம்மரக் கடத்தலை தடுக்க மோப்ப நாய்களுக்கு பயிற்சி

semmaram_001திருப்பதி, நவ.8–

ஆந்திர மாநிலம் சேஷால வனப்பகுதியில் செம்மரங்களை கடத்தல்காரர்கள் வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி செல்கின்றனர். இதைத் தடுக்க ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இதுவரை 150–க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்களை கைது செய்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல சிறப்பு படை பிரிவுகளை ஏற்படுத்தி கண்காணித்த போதும் செம்மரக்கட்டை கடத்தலை போலீசாரால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடிவதில்லை.

naaiகடத்தல்காரர்கள் செம்மரங்களை வெட்டி வனத்திலோ அல்லது வனத்தின் அருகிலுள்ள விவசாய நிலங்களிலோ பல அடி ஆழத்தில் புதைத்து வைக்கின்றனர். போலீசாரின் கண்காணிப்பு குறையும்போது அவற்றை வெளியே எடுத்த கடத்தி வருகின்றனர். பல அடி ஆழத்தில் புதைத்து வைக்கும் செம்மரக்கட்டைகளை சிறப்பு படை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடிவதில்லை.

எனவே மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து அதன் மூலம் செம்மரக் கடத்தலை தடுக்க தற்போது ஆந்திர அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக 2 மாத வயதுள்ள நாய்களை தேர்ந்தெடுத்து அதற்கு 6 மாத காலம் பயிற்சி அளித்து செம்மரக்கடத்தலை தடுக்கும் பணிகளில் பயன்படுத்த உள்ளனர். வனத்துறையினர் ரோந்தில் ஈடுபடும் போது உடன் பயிற்சியளித்த மோப்ப நாய்களை அழைத்து சென்றால் அவை செம்மரங்களின் வாசனையை கொண்டு பதுக்கி வைத்திருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடும்.

சோதனை சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களில் செம்மரம் கடத்தப்பட்டாலும் மோப்ப நாய்கள் கண்டறிந்துவிடும். இந்த நாய்களுக்கு ஹைதரபாத் அருகிலுள்ள விகாரபாத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இன்னும் 8 மாதத்தில் இந்த நாய்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

-http://www.maalaimalar.com

TAGS: