தமிழகம், புதுவையில் கடும் மழை:இயல்பு நிலை பாதிப்பு

chennai_rainதமிழகம் அருகே வங்க கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் கனத்த மழை நீடிக்கின்றது.

இப்பகுதிகளில் செவ்வாய்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், திங்களன்று பெய்து வரும் அடை மழை, மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்தது.

தமிழகத்தில் கடலோர வடமாவட்டங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அத்தோடு சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்கலைக்கழகங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகளும் இன்று ரத்தாகின.

குறிப்பாக புதுச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள தமிழக மாவட்டங்களில்தான் பாதிப்புகள் அதிகம் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மொத்தமாக தமிழகத்தில் மட்டும் பெய்து வரும் கனமழைக்கு 3 பேர் இறந்துள்ளதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெருநகரங்களில் இன்று பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் மின்சார சேவை பாதிக்கப்பட்ட்து. இதன் காரணமாகவும், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய காரணத்தாலும் வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிப்படைந்தன.

நீடித்து வரும் கனமழை மற்றும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பது தொடர்பான எச்சரிக்கை காரணமாகவும், சென்னையிலிருந்து இயக்கப்படும் ஒரு சில ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல ஒரு சில பேருந்துகளின் ஓடுதள பாதைகளும் மாற்றம் செய்யப்படும் என தகவல்கள் வெளயாகியுள்ளன.

இதனால் சென்னையிலிருந்து வெளியூர் செல்ல வேண்டிய பயணிகள் பாதிக்கப்ப்ட்டனர்

கடலூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விளைச்சல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் பயிர்கள் நாசமாகும் நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரா ஆகிய கடலோரங்களில் வாழும் மக்கள் பாதுக்காப்பான பகுதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப் படவில்லை.

பாதிப்புகள் அதிகம் ஏற்படும் என யூகிக்கப்பட்டுள்ள பகுதிகளில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுதப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரியிலும் மீட்பு குழுவினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை நீடிப்பதால், மலைச்சரிவு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பாதுக்காப்பு காரணங்களுக்காக திருப்பதி மழை பாதையில் இரு சக்கர வாகனங்களுக்கு தற்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. -BBC

TAGS: