பலரும் எதிர்பார்த்ததற்கும், அஞ்சியதற்கும் மாறாக பீகார் தேர்தல் முடிவுகள் அமைந்து விட்டன. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் இழுபறி நிலவப் போகிறது அல்லது சொற்ப இட முன்னணியில் நிதீஷ் குமார் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றி விடும் என்றே பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் வெளிவந்தன. என்டிடிவி மற்றும் சாணக்கியா தொலைக் காட்சிகளின் கருத்துக் கணிப்புகளில் மட்டும் பாஜக கூட்டணி தெளிவான வெற்றியைப் பெற்று விடும் என்று கணிப்புகள் வெளிவந்தன.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக நிதீஷ்குமார் தலையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்று அமோக வெற்றியைப் பெற்றுள்ளது நிதீஷ் குமாரின் கூட்டணி. மூன்றாவது முறையாக முதலமைச்சராகிறார் நிதீஷ் குமார். இந்த தேர்தல் முடிவுகளில் கிடைத்த ஒரு சுவாரஸ்யமான அனுபவம், பாஜக வைத் தவிர, அனேகமாக அனைத்துக் கட்சி ஆதரவாளர்களும், ஏன் எந்தக் கட்சியையும் சாராத திருவாளர் பொதுஜனமும் கூட இதில் மகிழ்ச்சி அடைந்ததுதான்.
மகிழ்ச்சி மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக ஒரு விதமான நிம்மதியை பலரிடமும் காண முடிந்தது. 2014 ல் மோடிக்கு வாக்களித்த சிலரிடமும் இதனைக் காண முடிந்ததுதான் ஆச்சரியமாக விருக்கிறது. இதற்குக் காரணம் கடந்த இரண்டு மாதங்களாக நாட்டில் நடந்து வரும் நிகழ்வுகள்தான். மாட்டுக்கறியை வீட்டில் வைத்திருந்தார் என்பதற்காக இஸ்லாமியர் ஒருவரை அடித்துக் கொன்றது, ‘அப்துல் கலாம் ஒரு சிறந்த தேச பக்தர் – அவர் ஒரு முஸ்லீமாக இருந்த போதும்’ என்று மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மஹேஷ் ஷர்மா பேசுவதும், அதற்கு சீதனமாக அவருக்கு கலாம் வசித்த வீட்டை மோடி அரசு அந்த அமைச்சருக்கு ஒதுக்குவதும், ‘பீகாரில் பாஜக தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசுகள் வெடிக்கும்’ என்று பாஜக தலைவர் அமீத் ஷா பேசுவதும், மத்தியில் ஆளும் கட்சியால் அரங்கேற்றப்பட்ட சராசரி இந்தியன் நினைத்து, நினைத்து புளகாங்கிதம் அடைய வேண்டிய செயல்கள்தான்.
33 பொதுக் கூட்டங்களில் நரேந்திர மோடி பீகார் தேர்தலில் உரையாற்றினார். அதுவும் கடைசி கட்டங்களில் யாதவர்களின் ஓட்டுக்களை கவருவதற்காக பசு மாட்டை விளம்பரங்களில் பயன்படுத்தத் துவங்கியது பாஜக. அசாதரணமான நிகழ்வாக மத்தியில் ஆளும் பாஜகவின் இரண்டு தேர்தல் விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. எந்தளவுக்கு பாஜகவின் தேர்தல் வியூகம் தரம் தாழ்ந்து போனது என்பதற்கு, அதனது தேர்தல் விளம்பரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்ததிலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம்.
தேர்தல்கள் வரும், போகும். வெற்றி, தோல்விகள் சகஜம். ஆனால் பீகார் தேர்தலில் பாஜக நடந்து கொண்ட விதம் நிச்சயம், ஆணவத்தின் உச்சம். இதற்கு முந்தைய, மோடி ஆட்சிக்கு வந்த பின் நடைபெற்ற மஹாராஷ்டிரா, டில்லி தேர்தல்களில் கூட இல்லாத ஆணவம் இந்த தேர்தலில் கொப்பளித்ததை பாமரனாலும் உணர முடிந்தது. பாஜகவின் தோல்வி பாகிஸ்தானில் பட்டாசுகளை கொளுத்திப் போடும் என்பது சகிக்க முடியாத ஆணவப் பேச்சு.
தேர்தல் வெற்றிகளும், தோல்விகளும் மாறி, மாறி வரும். ஆனால் தங்களுக்கு வாக்களிக்காதவர்கள் பாகிஸ்தானில் கொண்டாடப் படுவார்கள் என்று பாஜகவின் தலைவரே பேசுவது, அக்கட்சியின் சகிப்புத்தன்மைக்கு தரச் சான்றிதழ் வழங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வந்தவுடன் ஏன் பாஜகவைத் தவிர்த்த அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள் என்பதை நாம் சுலபமாக புரிந்து கொள்ளலாம் அல்லவா?
தற்போதைய முக்கியமான கேள்வி, பீகார் முடிவுகள் தேசிய அரசியலிலும், பாஜகவின் அணுகுமுறையிலும் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றன? என்ன மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்? என்பதுதான். இவற்றிற்கு இணையான மற்றோர் மிக முக்கியமான விஷயம், இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களில் பீகார் தேர்தல் முடிவுகள் என்ன மாற்றத்தை கொண்டு வரப் போகின்றன என்பதுதான்? இந்தியப் பொருளாதாரம் மேம்பட இன்று மிகப் பெரிய அளவில் அந்நிய நேரடி முதலீடுகள் (எஃப்டிஐ) தேவைப்படுகிறது. இதற்கு முக்கியமாக இரண்டு பொருளாதார சீர்திருத்தங்களை முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒன்று, ஜிஎஸ்டி எனப்படும் வரிச் சீர்திருத்தம், இரண்டாவது நில ஆர்ஜித மசோதா. இந்த இரண்டிலும் பல குறைபாடுகள் இருந்தாலும், இவற்றை நிறைவேற்றாமல் பெரிய அளவில் எஃப்டிஐ வரப்போவதில்லை. இந்தக் குறைபாடுகள் பற்றிய எதிர்கட்சிகளின் அச்சம் நியாயமானது.
ஆனால் அவற்றைச் சரி செய்து இந்த இரண்டு சீர்திருத்தங்களையும் செய்யத் தவறினால் விளைவுகள் நீண்ட கால நோக்கில் பார்த்தால் படு பாதகமானதாகவே இருக்கும். இது ஏன் இவ்வளவு முக்கியம் தெரியுமா? மாதந்தோறும் பத்து லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இன்று இந்தியா இருக்கிறது. இதற்கு எஃப்டிஐ மிக, மிக அவசியம். இந்தியா மட்டுமே இவ்வளவு வேலை வாய்ப்புகளை சத்தியமாக உருவாக்க முடியாது. இந்த விவகாரத்தில் சீனாவிடமிருந்து இந்தியா கற்க வேண்டியது ஏராளமிருக்கிறது.
தன்னுடைய பல்கிப் பெருகிய கோடானு கோடி இளைஞர் பட்டாளத்துக்கு வேலை கிடைக்க எஃப்டிஐ விஷயத்தில் சீனா கொணர்ந்த சீர்திருத்தங்கள்தான் உதவிக் கொண்டிருக்கின்றன. அதே நிலைமைதான் இன்று இந்தியாவிலும். ஆனால் இந்த இரண்டு மசோதாக்களும் நிறைவேறாமல் போய்க் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம், எதிர் கட்சிகளை அனுசரித்துப் போகாத மோடி அரசின் போக்குத்தான். 1991ல் நரசிம்ம ராவ் பதவிக்கு வந்தபோது கட்டவிழ்த்து விடப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால்தான் இன்று இந்தியா தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கிறது.
சாதாரண மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு நரசிம்மராவ் 25 ஆண்டுகளுக்கு முன்பு செய்ததை இன்று தனிப் பெரும்பான்மை வைத்துக் கொண்டும் மோடியால் செய்ய முடியாமல் இருப்பதற்குக் காரணம், எல்லோரையும் அரவணைத்துப் போகாத போக்குத்தான். நரசிம்மராவ் சீரான இடைவெளியில் எல்லா எதிர்கட்சித் தலைவர்களையும் கூட்டாக அழைத்தும் பேசுவார், தனித் தனியாக அழைத்தும் பேசுவார். அதனால் அவரால் பல காரியங்கள், பெரிய மெஜாரிட்டி இல்லாத போதும் செய்ய முடிந்தது.
ஆனால் இன்று நிலைமை.. பரிதாபம்! மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை இருந்தும் பாஜக அரசால் செய்ய முடியவில்லை. அரசியல் என்பது எப்போதும் எண்ணிக்கை மட்டுமல்ல, அது, ‘பர்சப்ஷென்’ அதாவது மனப் புரிதல், கருத்தோட்டம். இதில் தேர்தல்களில் தோற்பதை விட பாஜக கடுமையாகவே தோற்றுக் கொண்டிருக்கிறது. இதன் விளைவு திங்கட் கிழமையிலேயே தெரிந்தது. சரிவுடன் துவங்கிய பங்குச்சந்தைகள் உணவு இடைவேளையின் போது 600க்கும் மேற்பட்ட புள்ளிகள் அதள பாதாளத்துக்குப் போயின. அந்நிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பெருமளவில் வெளியில் எடுத்துக் கொண்டு போய்க் கொண்டிருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.
மீண்டும் இங்கு புரிந்து கொள்ள வேண்டியது பர்சப்ஷென்தான். பொருளாதார சீர்திருத்தங்கள் இப்போதைக்கு இந்தியாவில் சாத்தியமில்லை என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் வேரூன்றத் துவங்கிவிட்டதுதான் இதற்கு முக்கியமான காரணம். பீகார் தேர்தல் முடிவுகள் பொருளாதார சீர்திருத்தங்களை பாதிக்காது என்கிறார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஆனால் இதனை செவி மடுக்க பெரும்பாலான முதலீட்டாளர்கள் தயாராக இல்லை என்பதுதான் கள யதார்த்தம்.
ஆகவே அடுத்து மோடி அரசிடம் முதலீட்டாளர்களும், சாமானிய இந்தியனும் எதிர்பார்ப்பது என்ன என்பதுதான் ஆராய வேண்டிய விஷயம். சாமானிய இந்தியனுக்கு வேலை வேண்டும். கண்ணியமான வாழ்க்கைச் சூழல் வேண்டும். இவற்றை இந்த அரசு செய்த தர கால தாமதமானாலும் கூட சாமானிய இந்தியன் ஏற்றுக் கொள்வான். ஆனால் அண்ணன், தம்பிகளாய் காலம் காலமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடானு கோடி இந்தியர்களை மதத்தின் பெயரால் பிரிப்பதை, மாட்டுக்கறியின் பெயரால் மனித உயிர்களைக் குடிக்கும் நரகாசுரர்களாய் ஆட்சியாளர்கள் மாறுவதை சராசரி இந்தியன் ஒருநாளும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
அதைத் தான் பீகார் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. இந்தியாவின் ஆன்மா வேற்றுமையில் ஒற்றுமை காணும் சகிப்புத்தன்மை. இந்திரா காந்தியால் அவசர நிலையை பிரகடனம் செய்த பிறகும் மீண்டும் இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிக்க முடிந்ததற்கு காரணம், அவர், மதத்தின் பெயரால் இந்தியாவை துண்டாட ஒரு போதும் முயன்றதில்லை. அவசர நிலைக் காலத்தில் சராசரி இந்தியனின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. உண்மைதான். அதில் இந்து, முஸ்லிம் என்று வேறுபாடு பார்க்கவில்லை.
ஆனால் தற்போது, ஒரு முன்னாள் குடியரசுத் தலைவரை, ‘அவர் ஒரு சிறந்த தேச பக்தர், ஒரு முஸ்லீமாக இருந்த போதிலும்’ என்ற அவலமான கருத்துக்களை உதிர்ப்பவர்கள் மத்திய அமைச்சர்களாகத் தொடருகிறார்கள் என்றால் இதன் பேராபத்தை உணர்ந்து கொள்ளலாம். அடுத்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்கு நில ஆர்ஜித மசோதாவும், ஜிஎஸ்டி யும் எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு முக்கியம், சமூக நல்லிணக்கம். மூன்றாவது அனைத்து கட்சிகளையும் கலந்தாலோசிக்கும், அரவணைக்கும் போக்கு. மீண்டும் நரசிம்மராவைத்தான் நினைவுக் கூற வேண்டியிருக்கிறது. 1993ம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவத்தை பத்திரிகையாளர் சேகர் குப்தா தன்னுடைய ஒரு புத்தகத்தில் இவ்வாறு விவரிக்கிறார். ‘ஒரு முறை மக்களைவையில் மன்மோகன் சிங்கை பாஜக வறுத்தெறுத்து விட்டது.
பாஜக தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாயும் மற்றவர்களும் மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கையை எழுப்புகின்றனர். அடிப்படையில் அரசியில்வாதியாக இல்லாத மன்மோகன் மனம் நொந்து போய் தான் ராஜினாமா செய்து விடுவதாக நரசிம்ம ராவிடம் வந்து கூறுகிறார். ராவ் சூட்சுமம் நிறைந்தவர். தான் சொன்னால் மன்மோகன் சிங் கேட்க மாட்டாரென்று விவகாரத்தை யாரிடம் கொண்டு போனார் தெரியுமா? சாட்சாத் வாஜ்பாயிடம் கொண்டு போகிறார். விஷயத்தை கேட்டு சிரித்த வாஜ்பாய், தான் மன்மோகனை சரிகட்டுவதாகக் கூறுகிறார்.
சில நிமிடங்கள் கழித்து மன்மோகன் சிங் குடன் தொலைபேசியில் பேசிய வாஜ்பாய், அவரை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். மேலும் இது போன்ற கோரிக்கைகளை அரசியலில் சாதாரணமாக எழுக் கூடியவைத்தான் என்றும், மன்மோகனின் தனிப்பட்ட நேர்மையில் தனக்கோ, பாஜகவுக்கோ எந்த சந்தேகமும் இல்லையென்றும் கூறுகிறார். மன்மோகனும் தனது முடிவை மாற்றிக் கொண்டார்’ என்கிறார் சேகர் குப்தா. வாஜ்பாயும், பாஜகவும் இந்த பெருந்தன்மையை ஆ.ராசா உள்ளிட்ட மற்றவர்கள் விஷயத்தில் காட்டவில்லை என்பது வேறு விஷயம்.
இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, அடிப்படையான பொருளாதார விஷயங்களில் பாஜகவுக்கும, காங்கிரசுக்கும், பெரும்பாலான பிராந்திய கட்சிகளுக்கும், இடதுசாரிகளைத் தவிர்த்து, பெரிய வித்தியாசங்கள் இல்லாத நிலையில் மோடியால் சாதிக்க முடியாமல் போய்க் கொண்டிருப்பதற்கு காரணம், நரசிம்ம ராவிடமிருந்த அந்த இணக்கமான அணுகுமுறை இல்லாததுதான்.
தங்களை விமர்சிப்பவர்கள் எல்லோருக்கும் உள் அர்த்தம் கற்பிப்பதும், அவர்களின் தேச பக்தியை சந்திப்பதும், ஒரு பக்குவப்பட்ட கட்சி, அதுவும் இந்தியாவை ஆளும் கட்சி செய்யக் கூடாத காரியங்கள். இந்தப் போக்கு ஆர்எஸ்எஸூக்கு தகும். ஆனால் கண்டிப்பாக பாஜகவுக்குத் தகாது.. ஆகாது! தனி மனிதர்களுக்கு திருப்பு முனையான தருணங்கள் வருவது போல, ஸ்தாபனங்களுக்கும், கட்சிகளுக்கும் கூட திருப்புமுனையான தருணங்கள் வருவதுண்டு.
அந்தத் தருணம் தற்போது பாஜகவுக்கு வந்திருக்கிறது. பீகார் மக்களின் தீர்ப்பை தங்களது போக்கை திருத்திக் கொள்வதற்கான பொன்னான தருணமாக பாஜகவும், மோடியும் மாற்றிக் கொண்டால் அதன் லாபம் பாஜகவுக்கும், மோடிக்கும் மட்டுமல்ல, ஏக இந்தியாவுக்கும்தான். இன்னும் மூன்றரை ஆண்டுகாலம் ஆட்சியிருக்கும் மோடி தனது அரசுக்கான உரிய காலத்தே வந்த எச்சரிக்கை மணியாக பீகார் தேர்தல் முடிவுகளை எடுத்துக் கொண்டால் அது எல்லோருக்கும் நல்லது.
இப்போது மோடி அரசு ஒரு திருப்புமுனைக் கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. எந்த கருமேகங்களும், அதனுடன் சேர்த்து மின்னல் ஒளிக் கீற்றுக்களையும் கொண்டு வரும் என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. கெட்டதில் ஒரு நல்லதாய் ஓர் பொன்னான வாய்ப்பு வந்திருக்கிறது. திருந்துவார்களா?
இது சும்மா ட்ரைலர் தான், மெயின் பிக்சர் (பா ஜ க ஆட்சி கவிழ்வது)விரைவில் .