இந்தியாவைத் தாக்குவதற்காக பாகிஸ்தான் உருவாக்கியுள்ள அணுகுண்டுகள்: உலகுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன!

பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டங்களால் உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் “நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

“பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தல்’ என்ற தலைப்பில் அந்த நாளிதழில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

120 அணு குண்டுகளை வைத்துள்ள பாகிஸ்தான், இன்னும் பத்து ஆண்டுகளில் அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்தபடியாக அதிக அணு ஆயுதங்களைக் கொண்ட நாடாகிவிடும்.
உலகின் வேறு எந்த நாட்டையும்விட பாகிஸ்தான் அதிக வேகமாக அணுகுண்டுகளைக் குவித்து வருகிறது.

இந்தியாவைத் தாக்குவதற்காக பாகிஸ்தான் உருவாக்கியுள்ள சிறிய வகை அணுகுண்டுகளும், அந்த நாட்டின் தொலைதூர ஏவுகணைகளும் இந்தியாவுக்கு மட்டுமன்றி உலகுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.

அணு ஆயுதங்களைக் குவித்து வரும் பாகிஸ்தான், பல்வேறு பயங்கரவாதக் குழுக்களின் புகலிடமாகவும் திகழ்கிறது என்பதுதான் நெருடலான உண்மை.

அவற்றில் சில பயங்கரவாதக் குழுக்களுக்கு இந்தியாவைக் கண்மூடித்தனமாக வெறுக்கும் ஒரு சில பாகிஸ்தான் ராணுவ அமைப்புகளே பக்கபலமாக இருக்கின்றன.
இது, தெற்கு ஆசியா மட்டுமின்றி உலகின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

பாகிஸ்தான் தனது அணு ஆயுதத் திட்டங்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதை, உலக நாடுகள் முன்னுரிமை அளித்து உறுதி செய்ய வேண்டும். ஈரானிடம் ஒரு அணுகுண்டு கூட இல்லாத நிலையிலும், அந்த நாட்டால் உலகுக்கு ஏற்படக் கூடிய அணு ஆயுத அச்சுறுத்தலைத் தடுக்க வல்லரசு நாடுகள் இரண்டு ஆண்டுகளாக கடும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

ஆனால், வரையறையில்லாமல் அணு ஆயுதங்களைக் குவித்து வரும் பாகிஸ்தானிடம் அதுபோன்ற பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் வல்லரசு நாடுகள் உரிய அக்கறை காட்டவில்லை. இந்த சிக்கலான பிரச்னையை தற்போதுதான் அமெரிக்க அரசு உணர்ந்து கொண்டுள்ளது.

அதிபர் ஒபாமாவுக்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கும் இடையே கடந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பின்போது இதுகுறித்து நிகழ்த்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்தத் தீர்வும் ஏற்படவில்லை.

எனினும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் உச்சகட்டத்தில் இருந்த அந்த நேரத்தில் அந்த முயற்சியைக் கூட ஒபாமாவால் செய்யாமல் இருந்திருக்க முடியாது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்ததில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பங்குண்டு.

இவ்வாறு அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-http://www.dinamani.com

TAGS: