பிரதமர் மோடிக்கு எதிராக லண்டனில் வெடித்த உக்கிர போராட்டங்கள்!

modi-londonபிரதமர் நரேந்திர மோடியின் இங்கிலாந்து வருகைக்கு எதிராக நூற்றுக்கணக்கான இந்தியர்கள், “பயங்கரவாதியே திரும்பிப் போ” முழக்கத்துடன் பிரமாண்ட போராட்டங்களை லண்டனில் நடத்தியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார்.

மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாகவே லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று லண்டன் சென்றடைந்தார் பிரதமர் மோடி. அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள், நேபாளிகள், காஷ்மீரிகள், பெண்கள் அமைப்பினர் என பெருந்திரளாக திரண்டு போராட்டத்தை நடத்தினர். குஜராத் கலவரங்கள், பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் அதிகரித்து வரும் சகிப்பின்மை படுகொலைகள் ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.

டிஜிட்டல் இந்தியா, கிளீன் இந்தியா என்ற பெயரில் இந்தியாவை விற்பனை செய்ய முயற்சிக்கிறார் மோடி; மோடியின் ஆட்சியில் இந்தியாவில் கட்டமைக்கப்பட்டிருந்த மதச்சார்பின்மை மீது பெருந்தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வருகிறது என்பது இவர்களின் குற்றச்சாட்டு. இங்கிலாந்து பிரதமர் கேமரூனை பிரதமர் மோடி சந்தித்த போது “மோடி ஒரு பயங்கரவாதி” என்ற முழக்கங்களை எழுப்பியும் இவர்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அதேநேரத்தில் மோடிக்கு ஆதரவாக ஒரு சிறு குழுவும் முழக்கங்களை எழுப்பியது. இந்தப் போராட்டங்களில் கலந்து கொண்ட லண்டன் மேயர் வேட்பாளர் ஜார்ஜ் கால்லோவே, ரத்தக் கறை படிந்த கரங்களுடன் வந்துள்ளார் மோடி…

அவருடன் பிரதமர் கேமரூன் கை குலுக்குவது வெட்கக் கேடானது… இந்தியா என்ற பெரிய நாட்டின் பிரதமர் மோடி.. ஆனால் அவர் ஒன்றும் சிறந்த பிரதமர் அல்ல.. இங்கிலாந்து வாழ் இந்திய சிறுபான்மையினர் அனைவரும் மோடியின் கரங்களில் ரத்தக்கறை படிந்துள்ளது.. அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கக் கூடாது என ஒற்றைக் குரலில் வலியுறுத்துகின்றனர் என்றார்.

2002ஆம் ஆண்டு குஜராத் கலவரங்களை அம்மாநில முதல்வராக இருந்த மோடி கட்டுப்படுத்தவில்லை என்பதால் 10ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் இங்கிலாந்து அரசு அதிகாரப்பூர்வ தொடர்புகளை மேற்கொள்ளவில்லை. பிரதமரான நிலையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இங்கிலாந்துக்கு வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி.

tamil.oneindia.com

TAGS: