சென்னை நகரமே தீவாக மாறிவிட்டது!

cchennai* செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் புது ஆபத்து
* குடும்பம் குடும்பமாக மக்கள் வெளியேறும் பரிதாபம்
* வேளச்சேரி, ஓஎம்ஆர் முற்றிலும் துண்டிப்பு
* அடுக்குமாடி வீடுகளில் தவித்தவர்கள் ஹெலிகாப்டரில் மீட்பு

சென்னை : வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், 6 புறநகர் ஏரிகள் உடைப்பு மற்றும் கனமழை காரணமாக சென்னை நகரமே தீவாக மாறிவிட்டது. இதனால் சொந்த வீடுகளில் தங்க முடியாதவர்கள் குடும்பம் குடும்பமாக வீட்டை விட்டு வெளியேறி உறவினர்கள் மற்றும் விடுதிகளில் தங்கி வருகின்றனர். பலமாடிக்குடியிருப்புகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் படகுகள் மூலமும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. வெள்ளத்தில் சிக்கிய பல  குடும்பத்தினர், பால், காய்கறி, குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தவிப்பதாக குமுறுகின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.
வானிலை மைய எச்சரிக்கை புறக்கணிப்பு: கனமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் கடலூருக்கு பெரும்பாலான அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை நிவாரணப் பணிக்கு அனுப்பி விட்டது. அதே சமயம் மீண்டும் கனமழை குறித்து வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை காற்றில் பறக்கவிடப்பட்டது.

பொதுப்பணித் துறை அதிகாரிகளும் ஏரிகள் பராமரிப்பில் கோட்டை விட்டனர். சென்னை குடிநீர் மற்றும் வடிகால் அகற்று வாரிய அதிகாரிகள் மவுண்ட்ரோடு மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மட்டுமே தண்ணீர் தேங்கினால், அதை அகற்ற அக்கறை காட்டினர். மேலும் முதல்வர் வந்து செல்லும் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் மெரினா சாலையில் நீர் தேங்காதபடி பார்த்து கொண்டனர். இதனால், சென்னையின் ஆற்றோர பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளை முற்றிலும் மறந்தே விட்டனர். இதுவும் மழைநீர் அதிகளவு பாதிப்புக்கு காரணம். கிச்சன், பெட்ரூமும் தப்பவில்லை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் நேற்று வரை விடாமல் மழை கொட்டித்தீர்த்தது. ஏற்கனவே கடந்த வாரம் பெய்த மழையால் ஆங்காங்கே தேங்கிய மழைநீருடன் இந்த மழைநீரும் சேர்ந்ததால் தண்ணீரின் அளவு அதிகரித்தது. பல சாலைகளில் தேங்கிய மழைநீர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளின் பெட்ரூம், கிச்சன் உள்பட அனைத்து பகுதிகளுக்குள்ளும் புகுந்தது. எனவே, குடும்பம் நடத்த முடியாமல் பெரும்பாலான மக்கள் தத்தளித்தனர்.

ஏரிகள் திட்டமிட்டு உடைப்பு: கனமழையால் சென்னை புறநகர் பகுதியான வேளச்சேரி அருகேயுள்ள நாராயணபுரம் ஏரி நிரம்பும் நிலையில் இருந்தது.
ஏரி நீரை திறந்துவிட்டால் சில குறிப்பிட்ட பகுதிகள் பாதிக்கப்படும் என்பதால் சில விஷமிகள் இரவோடு இரவாக சில ஏரிகளை உடைத்தனர். அப்படி  நாராயணபுரம் ஏரி உடைந்த காரணத்தால் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில், ஏரி அருகே உள்ள பள்ளிக்கரணை மற்றும்  ராஜேஷ் நகர் பகுதியில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. சிறுவர்கள், முதியவர்கள் என பல ஆயிரம் பேர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். பலர் குழந்தைகளை தூக்கிக் கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்று வருகின்றனர். புறநகரில் ஆறு ஏரிகள் இப்படி உடைக்கப்பட்டுள்ளன. வேலைக்கு செல்ல முடியாமல் தவிப்பு: வேளச்சேரி நாராயணபுரம் ஏரி உடைந்ததால் தண்ணீர் முழுவதும் கிழக்கு தாம்பரத்தில் இருந்து ேவளச்சேரி செல்லும் 100 அடி சாலையின் குறுக்கே சுமார் 3 அடி உயரத்துக்கு பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சென்னை புறநகர் பகுதியில் வசிக்கும் மேற்கு தாம்பரம், கிழக்கு தாம்பரம், சேலையூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட புறநகர் பகுதி மக்கள் இச்சாலையை கடந்துதான் சென்னை நகருக்குள் தினசரி வேலைக்கு வந்து செல்வார்கள். ஏரி உடைந்து சாலைகளில் பெருக்கெடுத்து வெள்ளநீர் ஓடியதால் தண்ணீரை கடந்து அவர்கள் அலுவலகத்துக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

பத்து கிலோ மீட்டர் சுற்றியும் வேஸ்ட்: வேளச்சேரி 100 அடி சாலையின் குறுக்கே தண்ணீர் பாய்ந்து போக்குவரத்து தடைபட்டதால், வாகனங்களை திருப்பிக்கொண்டு மேடவாக்கம் வழியாக சோழிங்கநல்லூர் சென்று அங்கிருந்து பழைய மாமல்லபுரம் சாலை வழியாக சென்னை நகருக்குள் வந்துவிடலாம் என்று 10 கி.மீ. மேல் சுற்றிக்கொண்டு பலர் தங்கள் வாகனங்களில் செல்ல முயன்றனர். ஆனால், பழைய மாமல்லபுரம் சாலையிலும் 3 அடிக்கு மேல் மழைநீர் தேங்கி நின்றதால் போக முடியாமல் அவதிப்பட்டனர். இதுபோல், வேளச்சேரி தண்டீஸ்வரம்  நகர், டான்சி நகர், தேவி நகர், விஜயநகர், எம்ஜிஆர் நகர், ராம் நகர், தரமணி, தந்தை பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில  நாட்களாகவே மழைநீர் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வசிக்கும் மக்களின் இயல்வு வாழ்க்கை  முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகள் துண்டிப்பு: தென்தென்னை பகுதியான நன்மங்கலம்,  மேடவாக்கம், பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட தாழ்வான  பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், சாலைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால், கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து பொதுமக்களுக்கு  பல்வேறு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மொத்தத்தில் புறநகர் பகுதியான தென்சென்னையில் உள்ள கிழக்கு தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், பெருங்குடி, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை நகருக்கு அலுவலகங்களுக்கு செல்பவர்கள் சென்னை நகருக்குள் செல்லும் பிரதான சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பெரிதும் அவதிப்பட்டனர். அதேபோன்று சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் அடுத்துள்ள முடிச்சூர் பகுதியில் சாலையில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் ஓடியதால் அந்த பகுதி மக்களும் சென்னை நகருக்குள் நேற்று வர முடியவில்லை. கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள ராஜகீழ்ப்பாக்கம் ஏரி உடைந்ததால் சாலை மற்றும் வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் அவதிப்பட்டனர். அந்த பகுதியில் போக்குவரத்தும் முடங்கியது. மழை வெள்ளத்தால் ஏரிகள் உடைந்ததால் சென்னை புறநகர் பகுதியில் உள்ள வேளச்சேரி, தாம்பரம், செம்பாக்கம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதியில் பல லட்சம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. பாம்பு, பூரான், நத்தை, ஆமை போன்றவை வீடுகளுக்குள் வந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகளோ, கவுன்சிலர்களோ, எம்எல்ஏக்களோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதேபோல, சோழிங்கநல்லூர் அருகேயுள்ள செம்மஞ்சேரி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து ஏரி உடைந்து அருகில் உள்ள செம்மஞ்சேரி எழில்முக நகர், ஜவகர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. ஏரியிலிருந்து வெளியேறிய நீர் அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே வர முடியாமல் திணறி வருகின்றனர். அப்பகுதியில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் கடும் அவதிப்படுகின்றனர். வீட்டிற்குள் கழுத்தளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் இரவு நேரத்தில் தூக்கமின்றியும், சமைக்க வழியின்றியும் தவித்து வருகின்றனர். மேலும், ராஜிவ் காந்தி சாலை பெருங்குடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம் உள்ளிட்ட போக்குவரத்து சாலைகளில் தண்ணீர் தேக்கம், பெருங்குடி சுங்கச்சாவடி அருகே முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இசிஆர் பாலவாக்கம், நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி உள்ளிட்ட சாலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் தென்சென்னை பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டையில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வருகின்றனர். இங்கு தற்போது பெய்து வரும் தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக வீடுகளுக்குள் தண்ணீர் நாள் கணக்கில் தேங்கி நிற்பதால் குடியிருப்புவாசிகள் வாழ வழியில்லாமல் திண்டாடி வருகின்றனர். வீட்டுக்குள் முடக்கம்: ஓஎம்ஆர், வேளச்சேரி பகுதிகள் பலவும் துண்டிக்கப்பட்டுள்ளன.  துரைப்பாக்கம் எல்லையம்மன் நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள மகாத்மா காந்தி நகர், கற்பக விநாயகம் நகர், வெங்கடேஷ்வரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் முழுவதும் இடுப்பளவு தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

மேட்டுக்குப்பம் விபிஜி அவென்யூ ரோட்டில் மழைநீர் தேங்கியுள்ளதால் சாலைகளில் பள்ளம், மேடு தெரியாமல் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே கீழே விழுந்து அவதிப்படுகின்றனர். ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகர், சோழமண்டல தேவி நகர், பல்லவன் நகர், திருவள்ளுவர் சாலை, வெட்டுவாங்கேணி ராமலிங்கா நகர், ஈஞ்சம்பாக்கம் ராஜன் நகர், செல்வா நகர் ஆகிய பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் அனைத்திலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. நீலாங்கரை சரஸ்வதி நகர் தெற்கு வெங்கடேஷ்வரா நகர், அறிஞர் அண்ணா நகர், பாரதி நகர், ராஜேந்திரா நகர் பகுதிகளில் தண்ணீர்   தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நாராயணபுரம் ஏரி, செம்மஞ்சேரி ஏரி உடைந்ததாலும், பல சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதாலும் தென் சென்னையில் பெரும்பாலான இடங்கள் தண்ணீரில் மிதக்கிறது. இதனால் லட்சக்கணக்கானோர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், அலுவலகம் செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனர்.

சாப்ட்வேர் கம்பெனிகள் மூடல்

சென்னை பழைய மாமல்லபுரம் சாலை பகுதியில் உள்ள தரமணி, துரைப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் பகுதியில்தான் ஏராளமான சாப்ட்வேர் கம்பெனிகள் உள்ளன. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் இந்த சாலையின் இரண்டு பக்கமும் 3 அடி உயரத்துக்கும் மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பலர் வேலைக்கு வரவில்லை. நேற்று திங்கட்கிழமை வழக்கம்போல் சாப்ட்வேர் கம்பெனி ஊழியர்கள் வேலைக்கு வந்தனர். ஆனால், பழைய மாமல்லபுரம் சாலையில் தண்ணீர் பல அடி உயரத்துக்கு தேங்கி நின்றதால் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். பலரது இரண்டு சக்கர வாகனங்கள் நடுவழியில் நின்றன. ஒருவழியாக தண்ணீரில் நீந்தி அலுவலகம் வந்தாலும், பல சாப்ட்வேர் கம்பெனிகள் திறக்கப்படவில்லை. மழை வெள்ளம் காரணமாக சாப்ட்வேர் கம்பெனிகள் மூடப்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

வந்தது ராணுவம்

சென்னை நகர் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.  பலர்  படகு மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். ஆனாலும், பலர் வெள்ளத்தில்  சிக்கியுள்ளனர். இரவில் மேலும் வெள்ளம் அதிகரிக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மீட்பு பணியில் ராணுவத்தை ஈடுபடுத்த  வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால்தான்  இந்த வெள்ளத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால், மீட்பு பணிக்கு ராணுவத்தின் உதவியை கேட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா  தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று தாம்பரம், முடிச்சூர், மணிமங்கலம் உட்பட புறநகர் பகுதிகளில் விமானப்படை ஹெலிகாப்டர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

தனித்தீவானது வேளச்சேரி

சென்னையில் எப்போது மழை பெய்தாலும் முதலில் பாதிக்கப்படுவது வேளச்சேரி பகுதிதான். சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வேளச்சேரியில் தண்ணீர் நாளுக்கு நாள் அதிகரித்தது. நேற்று ஓரளவு மழை குறைந்திருந்தாலும், வேளச்சேரி முழுவதும் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. விஜயநகரம் பஸ் நிலையமே தெரியாத அளவுக்கு பல அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இது தெரியாமல் பலர் நேற்று வழக்கம்போல் வேளச்சேரி வழியாக சென்னை நகருக்குள் வேலைக்கு செல்ல முயன்றனர். ஆனால் தனித்தீவு போல் காட்சி அளிக்கும் வேளச்சேரி சாலை வழியாக யாரும் செல்ல முடியவில்லை. வேளச்சேரி ரயில்  நிலைய பாலத்தில் போலீசார் குவிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல  முடியாது என்று அறிவுறுத்தி வாகன ஓட்டிகளை திருப்பி அனுப்பினர். பஸ்கள் மற்றும் கார்கள்  மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது.

-http://www.dinakaran.com

TAGS: