மாற்று பாலினத்தவருக்கான உரிமைகள்களுக்கு முன்னுரிமை: ஐ.நா.வில் இந்தியா

transgenderநியூயார்க்: மனித உரிமைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில், ஐக்கிய நாடுகள் சபை மதம், மற்றும் கலாச்சாரம் சார்ந்த பின்புலங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

உலக நாடுகளுக்கிடையிலான மனித உரிமை கோட்பாடுகள் ஒருமித்த கருத்தை உடையனவாக சீரானதாக இல்லை, எனவே அந்நாடுகளுடனான மனித உரிமை குறித்த பேச்சு வார்த்தையின் போது பிராந்திய, கலாசார மற்றும் மத ரீதியிலான கோட்பாடுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என இந்தியா சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட ஐநா.,விற்கான இந்திய துணை தூதர் பகவந்த் சிங் பிஷ்னாய் பேசுகையில், மனித உரிமைகள் தொடர்பான கோட்பாடுகள், ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகவும், எளிதில் பிரிவினையை உண்டாக்காத வகையிலும் ஒன்றை ஒன்று சார்ந்தும் அமைய வேண்டும். தனிமனிதனின் நிலையான வளர்ச்சிக்கான உரிமை இந்த அவையால் உறுதி செய்யப்பட வேண்டும்.

இதற்காக “ஆக்கப்பூர்வமான சர்வதேச கலந்துரையாடல்” அவசியம் என்று கூறினார். ஒரே பாலினத்தவருக்கான திருமணம், மூன்றாம் பாலினத்தவருக்கான அடிப்படை உரிமைகளை சர்வதேச நாடுகளில் நிலையாக ஏற்படுத்த ஐ.நா சபை மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. இதுபோன்ற சட்டங்களை இஸ்லாம் மதத்தினர் அதிகமாக வாழும் நாடுகளில் நடைமுறைபடுத்துவதில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.

மூன்றாம் பாலினத்தவருக்கான உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகள் பலவும், ஆப்பிரிக்க நாடுகளும் கடுமையாக எதிர்த்தன. ஆனால் இந்தியாவில் வாழும் மூன்றாம் பாலினத்தவருக்கான உரிமைகளை நிலை நாட்ட உச்சநீதிமன்றம் சில அடிப்படை நெறிமுறைகளை வகுத்துள்ளது.

அதன்படி, மூன்றாம் பாலினத்தவர் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்களது பாலினத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.மேலும் அவர்களின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை வழங்கி அவர்களுக்கான உரிமைகளை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. எல்லோருக்கும், எல்லா வித வாய்ப்புகளும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது என்றார்.

tamil.oneindia.com

TAGS: