1000 ஆண்டுகள் பழைமையான சோழர் கால வெண்கலச் சிலை: இந்தியா கொண்டு வர நடவடிக்கை

chola_statue_001தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான சாமி சிலைகள் விரைவில் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக கோவில்களில் இருந்து கடந்த 2000-ம் ஆண்டு முதல், கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் என்பவர் வெண்கல சிலைகள் பலவற்றை நியூயோர்க்கிற்கு கடத்தியுள்ளார்.

அங்கு அவர் நடத்தி வந்த ‘ஆர்ட் ஆப் பாஸ்ட்’ என்னும் பழங்கால கலைப்பொருட்கள் கூடம் மூலம் அவற்றை ரூ.660 கோடி வரை விற்றுள்ளார்.

இந்திய தொல்லியல் துறையினர் தமிழக கோவில்களில் காணாமல் போன சிலைகள் கடத்தப்பட்டு அமெரிக்காவில் விற்கப்படுவதை கண்டுபிடித்துள்ளனர்.

சோழர் காலத்தைச் சேர்ந்த (கி.பி.860-1279) சிவன்-பார்வதி வெண்கலச் சிலைகளும் 2004-ம் ஆண்டு, பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

அந்த 2 சிலைகளும், இண்டியானா மாகாணத்தில் உள்ள டேவிட் ஆவ்ஸ்லி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து சுபாஷ் கபூரை பிடிக்க இந்திய தொல்லியல் துறையின் விசாரணை அதிகாரிகள் 3 ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

அவர் 2011-ல் ஜேர்மனியின், பிராங்க்பர்ட் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதோடு, அவருக்கு உதவியாக இருந்த அமெரிக்கர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர், விற்ற திருட்டு சிலைகளை அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறையும், உள்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு அமைப்பும் தொடர்ந்து பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

சுபாஷ் கபூரை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த மத்திய அரசின் உதவியுடன் தமிழக பொலிசார் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

எனவே கடந்த 2012-ம் ஆண்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட அவர் சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இண்டியானா மாகாணத்தில் இருந்த சோழர் கால சிவன்-பார்வதி சிலைகளை டேவிட் ஆவ்ஸ்லி அருங்காட்சியகத்தினர், அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறையும், உள்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு அமைப்பினரிடம் நேற்று முன்தினம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சிலைகளை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

-http://www.newindianews.com

TAGS: