தலித் மாணவனுக்கு சாதிய பஞ்சாயத்தில் நிகழ்ந்த கொடூரம்: தூக்கு மாட்டி தற்கொலை

dalit_dead_001நெல்லை – குமரியின் சந்திப்பில் வருகிற ராதாபுரம் தாலுகாவில் நடந்த சாதிய பஞ்சாயத்து ஒன்றில் இருபதே வயதான பாலிடெக்னிக் மாணவனை செருப்பால் அடிக்க உத்தரவிட்டதால் மனமுடைந்த அவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சமூக ஆர்வலர் ‘எவிடென்ஸ்’ கதிர் இது குறித்து கூறுகையில், தினமும் மருந்து மாத்திரையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் தலித் சமூகத்தை சேர்ந்த ராஜதுரை- சரோஜா தம்பதியருக்கு பொன்தாமரைச்செல்வன் ஒரே பிள்ளை.

பாலிடெக்னிக் 3ம் ஆண்டு படித்து வந்த அவன், பகுதி நேரமாக காற்றாலை நிறுவனத்தில் வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளான்.

கடந்த 8ம் திகதி அன்று, இவனும், எதிர்வீட்டில் வசிக்கும் மணிமுத்து என்பவரது மகன் ஐயப்பனும் ஆவரக்குளத்தில் குளிக்க சென்றுள்ளனர்.

அங்கு ஐயப்பனுக்கும், ஆவரக்குளம் இளைஞர்களுக்கும் ஏற்பட்ட தகராறை பொன்தாமரைச்செல்வன் தடுத்துள்ளான்.

இதையடுத்து 8ம் திகதி மாலை, ஆவரக்குளத்தை சேர்ந்த நபர் தண்டோரா போட்டுகொண்டு, ஆவரக்குளத்தில் குளிக்கப் போன இடத்தில் உங்கள் ஊர் இளைஞர்கள் சண்டை போட்டதோடு, அங்கே செல்போனையும், பணத்தையும் திருடியுள்ளனர்.

எனவே, நாளை காலை 9 மணிக்கு பஞ்சாயத்தில் ஆஜராகச் சொல்லி ஆவரக்குளம் பஞ்சாயத்து உத்தரவு என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மறுநாள் காலை ஐயப்பனும், பொன்தாமரைச்செல்வனும் பஞ்சாயத்துற்கு சென்றுள்ளனர்.

அங்கே ஐயப்பனை சாதாரணமாக விசாரித்துள்ளனர். பொன்தாமரைச்செல்வனை உள்ளாடையுடன் மரத்தில் கட்டி வைத்து விசாரித்துள்ளனர்.

பின்னர் பொன்தாமரைச்செல்வனை ஆளாளுக்கு செருப்பால் அடித்துள்ளனர்.

அதன் பின்னர், 10 ஆயிரம் அபராதத்துடன் நாளைக்கு பஞ்சாயத்துக்கு வர வேண்டும் என்று தீர்ப்பு சொல்லியுள்ளனர்.

மிகுந்த மன அழுத்தத்துடன் வீட்டுக்கு வந்த பொன்தாமரைச்செல்வன் வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கியுள்ளான்.

வள்ளியூர் டி.எஸ்.பி. பாலாஜி, பஞ்சாயத்தைக் கூட்டிய ஊர் மிராசு உள்ளிட்ட அனைத்து பஞ்சாயத்தாரையும் வரவழைத்து, சரியான பாதையில் விசாரணையை கொண்டு போயிருக்கிறார்.

ஆனால், எங்கிருந்தோ வந்த தொலைப்பேசி அழைப்பால் அவர் விசாரணையை சரியாக தொடரவில்லை.

எனவே, பொன்தாமரைச்செல்வனின் பெற்றோர், ஊர் மக்கள் கடந்த 9ம் திகதியில் இருந்து 13ம் திகதி வரை 5 நாட்களாக சடலத்துடன் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இது குறித்த முழுமையான நேரடி விசாரணையை நாங்கள் முடித்திருக்கிறோம்.

மாணவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அரசு உதவியும், ஆதரவற்ற அவன் பெற்றோருக்கு ரூ.5 ஆயிரம் ஓய்வூதியமும் வழங்கக் கோரி கோரிக்கை வைத்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் பல இடங்களில் இப்படியான சாதிய பஞ்சாயத்துகள் நடக்கின்றன.

இவைகள் முடிவுக்கு வரவேண்டும், இல்லையென்றால் இதுபோன்ற மரணங்களை தவிர்க்கவியலாது என தெரிவித்துள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: