சென்னையில் இவ்வளவு மழை பெய்தும் எல்லாமே வீண்.. கடலில் போய் சேர்ந்தது!

chennai-rain8124-600சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருந்தாலும், பெருமளவு நீர் கடலில் கலந்துள்ளதாக புகார் எழுந்திருக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக கடந்த 15 நாட்களில் சென்னையில் மட்டும் 623 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் கிட்டதட்ட 16 சதவிகிதம் அதிகமாகும்.

பருவ மழை தொடங்கும் முன் குடிநீர் பஞ்சம் ஏற்பட்ட நிலையில் தற்போது பெய்த மழையின் காரணமாக முக்கிய நீர் நிலைகளான செம்பரம்பாக்கம் ஏரி, ரெட்டேரி, புழல் ஏரி, போன்ற ஏரிகள் நிரம்பியுள்ளன.

மேலும், இந்த கன மழையின் காரணமாக அடையாறு ஆறு, கூவம் ஆறு, போன்ற ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது ஒரு புறம் இருந்தாலும் தற்போது பெய்த மழை நீரை சேமிக்க வசதியில்லாததால் சுமார் 6 டி.எம்.சி நீர் வீணாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடையாற்றில் நீரை சேமிக்க மணப்பாக்கத்தில் தடுப்பணைகள் கட்டப்பட்டன. ஆனால் விமான நிலைய விரிவாக்கத்திற்காக இந்த தடுப்பணைகள் இடிக்கப்பட்டு விட்டன. அடையாற்றுக்கு செம்பரம்பாக்கத்தில் இருந்தும், கூவம் ஆறுக்கு திருவள்ளூரில் இருந்தும் மழை நீர் வருவதால் அந்த மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளை ஆழப்படுத்தினால் கூடுதல் நீரை சேமிக்க முடியும் என்றும் நீரியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

tamil.oneindia.com

TAGS: