கோட்சேவை நாயகனாக்கினால், அகிம்சை காந்தி யார்?

gotse_gandhi_001காந்தியடிகளை சுட்டுக்கொன்ற கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான நவம்பர் 15 ம் திகதியை, சில இந்து மத அமைப்புகள் வீரவணக்க நாளாக அனுசரித்தன.

இதற்கு ஒருபக்கம் ஆதரவு இருந்தாலும், இந்தியாவின் தேசத்தந்தையாக போற்றப்படும் காந்தியடிகளை கொன்றவன் நாயகனா? என பலத்த எதிர்ப்பும் காணப்படுகிறது.

அகிம்சைக்கும், சுதந்திரத்திற்கும் தீண்டாமைக்கும் மத நல்லிணக்கத்துக்காகவும் எதிரிகளையும் காயப்படுத்தாமல் பாடுபட்டவர் காந்தியடிகள்.

நிகழ்கால அரசியல்வாதிகள் போல பதவி உள்நோக்கத்திற்காகவோ, அல்லது தான் சார்ந்த ஜாதி, மத ஆதிக்க வாழ்வுக்காகவோ காய் நகர்த்திய தலைவர் அல்ல.

இந்திய தேசதந்தையாக மட்டுமல்லாமல், நெல்சன் மண்டேலாவை போல உலகளவில் அமைதி, சமாதானம், அகிம்சையின் வடிவமாக பார்க்கப்படுபவர் என பலதரப்பட்ட மக்களாலும் போற்றப்படுகிறார்.

அத்தகைய மாமனிதரை கொன்றதால் தூக்கிலிடப்பட்ட கோட்சேவுக்கு வெளிப்படையாகவே வீரவணக்கநாள் கொண்டாடுவது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

அதாவது, காந்தியடிகளை கொன்றது சரி என்றால் எல்லா தீவிரவாத அமைப்புகளினாலும் ஏற்பட்ட உயிர் பலிகளையும் கோட்சே ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

இந்துக்கள் மட்டுமே வாழும் நாடாக இருந்தாலும், இதுபோன்ற கொள்கை வக்கிரம் கொண்டவர்களால், இந்துக்களே சுதந்திரமாக வாழமுடியாத நிலையே இங்கு ஏற்படும்.

பிரதமர் மோடி சமீபத்தில் லண்டன் விம்பிளி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய வம்சாவழியினரிடம் பேசும்போது, இங்கிலாந்து பாராளுமன்றத்தின் முன் வைக்கப்பட்டிருக்கும் காந்தியடிகளின் சிலையை பார்க்கும்போது பெருமைகொள்ளாத இந்தியன் இருக்க முடியாது என்றார்.

மோடிக்கும் பாஜவுக்கும் ஆதரவான அமைப்புகளே இப்படி செய்வது தொடையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதுபோல உள்ளது. இதற்கு பாஜ, ஆர்.எஸ்.எஸ். கண்டனம் தெரிவித்தது ஒரு ஆறுதல்.

இந்த நிலையில் உத்திர பிரதேச அமைச்சர் அசாம் கான், பாரிஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையே நியாயப்படுத்தியுள்ளார். அமெரிக்கா மற்றும் மேற்குலக அதன் நட்பு நாடுகள் எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்கவே ஈராக், லிபியா, சிறியா, ஆப்கானில் போர் நடவடிக்கை எடுத்தன. அதுவே ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு காரணம் எனவும் தனது தீவிரவாத நேயத்தை காட்டுகிறார்.

இப்படி பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களே அவரவர் மத தீவிரவாதிகளுக்காக மார்தாங்கினால், இந்தியாவின் எதிர்காலம் என்னாவது?

ஆயுதத்தை கையில் எடுத்தவர்கள் தீவிரவாதமே சரி என்கிறார்கள். தீவிரவாதத்தை அழி என்பவர்களும் ஆயுதத்தை கையில் எடுப்பதே வழி என்கிறார்கள்.

இதனால் இருதரப்பினர்களுக்கான சண்டை மட்டுமே மேலோங்கிவிடுகிறது.

பழிக்குப்பழியாக குரோதத்தை மையப்படுத்தி அழிவுகளை அடுக்கிக்கொண்டே போவது ஆபத்தானது, அறிவுக்கு ஒவ்வாதது, வாழ்க்கையின் குறிக்கோளுக்கு அவசியமில்லாதது என்று யாரேனும் வலியுறுத்தினால், எதிரிகளை விடவும் அவரை முதன்மையாக குறிவைத்து அழிக்கவும் செய்கின்றனர்.

தீவிரவாதத்துக்குள் சென்றவர்கள் முதலில் பலியானாலும் முடிவில் பலியானாலும் ஒன்றுதான்.

அவர்கள் தற்கொலை வரிசையில் தங்களது வாழ்க்கையை தொலைத்து காத்திருப்பவர்கள் தான் என்பதே நிதர்சனமான உண்மை.

-http://www.newindianews.com

TAGS: