நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் தலைவர்களும் கருத்தொற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே நதிகள் இணைப்பு என்பது சாத்தியமாகும் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கூறினார்.
வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தேசிய நீர்வழிச் சாலை மூலம் நதிகள் இணைப்பு என்ற தலைப்பில்
கருத்தரங்கைத் தொடக்கிவைத்து அவர் மேலும் பேசியதாவது:
இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் நீர்வழிச் சாலை மூலம் இணைக்கும் முயற்சிகள் பல முறை மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு காரணங்களால் செயல்படுத்த முடியாமல் தோல்வி அடைந்து விட்டது.
கங்கை – காவிரி இணைப்புத் திட்டம் குறித்து கே.எல்.ராவ், இமாலய நதிகள் இணைப்புக் குறித்து முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெற வில்லை.
தங்க நாற்கர சாலைத் திட்டத்தைத் தொடங்கி, அதைச் சிறப்பாகச் செயல்படுத்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தேசிய நீர்வழிச் சாலைத் திட்டத்தின் மூலம் நதிகளை இணைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொண்டும் இயலவில்லை.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, ராஜஸ்தான் பாலைவனத்தில் நமது திறமை வாய்ந்த பொறியாளர்களைக் கொண்டு கால்வாய் மூலம் நீர் கொண்டு வந்து சாதனை நிகழ்த்தியதை அனைவரும் அறிவர்.
கடந்த 1980-ஆம் ஆண்டு திட்டக் குழு உறுப்பினராக இருந்த என்னிடம் கே.எல்.ராவ் பரிந்துரைகளைக் கொண்டு நதிநீர் இணைப்புக்கு முயற்சி மேற்கொள்ளுங்கள் என்று கூறியபோது, நீங்கள் அனைத்து மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்களிடம் அனுமதிப் பெற்றுத் தந்தால் செயல்படுத்தலாம் என்று கூறினேன்.
நீர்வழிச் சசாலை மூலம் நதிகள் இணைக்கப்பட்டால் வேளாண்மை, நீர்மின் உற்பத்தி வேலைவாய்ப்பு பெருகும். போக்குவரத்து மூலம் எரிபொருள் செலவு குறையும். இந்தத் திட்டத்தை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தாமல், நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு செயல்படுத்த வழிமுறைகள் காணப்பட வேண்டும் என்றார் அவர்.
கங்கை – குமரி தேசிய நீர்வழிச் சாலைத் திட்டதின் தலைவரும், பொதுப் பணித் துறை முன்னாள் பொறியாளருமான ஏ.சி.காமராஜ் பேசியதாவது:
நாட்டில் ஒருபுறம் வெள்ளம், மறுபக்கம் வறட்சி நிலவுகிறது. பல நகரங்களில் குடிநீர் விநியோகம் 20 நாள்களுக்கு ஒருமுறை வழங்கும் நிலை உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் சில பகுதிகளில் ஆயிரம் அடிக்கும் கீழ் சென்று விட்டது. இன்னும் 20 ஆண்டுகளில் தமிழகம் வறட்சி மாநிலமாகி விடும் நிலை உள்ளது. இதற்கு நதிகளை இணைப்பதுதான் ஒரே தீர்வு.
நாட்டில் ஓடும் நதிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்து நீர்வழிச் சாலைகள் மூலம் இணைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் நீர்மின் உற்பத்தி 4 ஆயிரம் மெகா வாட்டில் இருந்து 60 ஆயிரம் மெகா வாட்டாக உயர வாய்ப்புள்ளது. வேளாண் சாகுபடி 30 மில்லியன் ஹெக்டேரில் இருந்து 65 மில்லியன் ஹெக்டேராக உயரும் என்றார்.
முன்னதாக விழாவுக்குத் தலைமை வகித்த வி.ஐ.டி.வேந்தர் ஜி.விஸ்வநாதன் பேசியபோது, நதிநீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும். ஏரி குளங்களை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். தற்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசு நீர்வழிச் சாலை மூலம் நதிகளை இணைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.
மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் இரா.செழியன், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சாதிக், வி.ஐ.டி. துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன், உதவி துணைத் தலைவர் காதம்பரி விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-http://www.dinamani.com