ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர 2 தமிழக இளைஞர்கள் முயற்சி- அதிரடியாக நாடு கடத்தியது துருக்கி!!

isis-genocide

சென்னை: உலகின் மிக கொடூரமான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற தமிழகத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்காசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளில், இந்தியாவைச் சேர்ந்த, 150 இளைஞர்கள், தீவிர ஆர்வம் காட்டி வருவதாக உளவு அமைப்புகள் கண்டறிந்துள்ளன.

இந்த இளைஞர்களின் நடவடிக்கைகளை, பாதுகாப்பு நிறுவனங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பட்டதாரி இளைஞர் மற்றும் கரூரை சேர்ந்த அவரது நண்பர் ஆகிய இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முடிவு செய்து துபாய்க்கு சென்றுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுலா பயணிகள் போல் பெங்களூருவிலிருந்து துபாய் சென்ற இருவரும் பின்னர் அங்கிருந்து துருக்கி சென்றுள்ளனர்.

சிரியா எல்லைப் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கி எல்லை தாண்டி செல்வது குறித்து இருவரும் விசாரித்திருக்கின்றனர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தங்கும் விடுதி ஊழியர் துருக்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இருவரையும் பிடித்து விசாரித்த துருக்கி அதிகாரிகள் அவர்கள் இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக வந்து இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து இருவரும் துருக்கியிலிருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். பெங்களூருவுக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்த அவர்களை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பிவைத்தனர்.

இருவரையும் தொடர்ந்து கண்காணித்து வரும் உளவுத்துறை அதிகாரிகள் அவர்கள் துருக்கி வரை செல்ல உதவி செய்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தியாவிலிருந்து இதுவரை 23 இளைஞர்கள், சிரியா மற்றும் ஈராக் நாடுகளில், ஐ.எஸ். ஐ.எஸ் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இவர்களில் ஆறு பேர், மேற்கத்திய நாடுகளின் விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்; ஒருவர், இந்தியா திரும்பிவிட்டார்.

இவர்கள், மஹாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்தியாவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாகளால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் இந்த இயக்கத்தில் சேர முயற்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளில், இந்தியாவைச் சேர்ந்த, 150 இளைஞர்கள், தீவிர ஆர்வம் காட்டி வருவதாக உளவு அமைப்புகள் கண்டறிந்துள்ளன. இந்திய பாதுகாப்பு நிறுவனங்களின் கண்காணிப்பில் உள்ள, 150 இளைஞர்கள், இணையதளம் மூலம் ஐ.எஸ். ஐ.எஸ் இயக்கத்தினருடன் அடிக்கடி தொடர்பு கொண்டு வருவதாக அறியப்பட்டுள்ளது. எனவே, அவர்களின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: