மனைவி கொடுக்கும் தொல்லையால் தினம், தினம் செத்து பிழைக்கிறேன்; கருணை மரணம் செய்துகொள்ள என்னை அனுமதிக்க வேண்டும்!

suicideபீதர்: கொடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருணை மரணம் செய்துகொள்ள அனுமதி கோரி விண்ணப்பம் கொடுப்பதை கேட்டுள்ளோம். ஆனால், மனைவி கொடுமை தாங்க முடியாமல், கருணை மரணத்திற்கு அனுமதி தர வேண்டும் என்று கணவர் ஒருவர் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ராம்நகரில் வசிப்பவர் விக்னேஷ், எஸ்.டி.டி. பூத் வைத்துள்ளார். கடந்த 12 ஆண்டுக்கு முன் அவரது கடை அருகில் உள்ள தையல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவந்த பிரிணிதாவுடன் பழக்கமாகி காதலாக மாறியது. இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணமும் நடந்தது. 12 ஆண்டுக்கு மேலாகியும் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து வாழ விரும்பாமல், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு செய்தனர். அந்த மனு தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் விக்னேஷ், மாநில ஆளுநருக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:  கடந்த 12 ஆண்டுக்கு முன் பிரிணிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு குழந்தை பாக்கியமில்லை. அதை காரணமாக வைத்து மனைவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்னிடம் தகராறு செய்தனர். அடிக்கடி சண்டை போட்டு வருகிறார்கள். எனது எஸ்.டி.டி. பூத்தையும் பலவந்தமாக பறித்து கொண்டனர். எனக்கு சொந்தமான வீட்டின் மூலம் கிடைக்கும் வாடகை பணத்தையும் மிரட்டி வாங்கி விடுகின்றனர். எனவே, நான் பிழைக்க வழிதெரியாமல் தவித்து வருகிறேன்.

பிரிணிதாவின் குடும்பத்தினர் கொடுக்கும் தொல்லையால் தினம், தினம் செத்து பிழைக்கிறேன். அடிக்கடி தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றுகிறது. ஆனால், சட்டத்திற்கு மாறானது என்பதால், எனது மனம் அதை மறுக்கிறது. எனக்கு நியாயம் கிடைக்க வழிசெய்ய வேண்டும். இல்லையேல், குடும்ப தொல்லையில் இருந்து முழுமையாக விடுதலை பெற வசதியாக கருணை மரணம் செய்துகொள்ள என்னை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

-dinakaran.com

TAGS: