ஸ்தம்பித்தது சென்னை!

  • சென்னை அரும்பாக்கம் நூறு அடிச் சாலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் செவ்வாய்க்கிழமை ஊர்ந்து சென்ற வாகனங்கள்.
    சென்னை அரும்பாக்கம் நூறு அடிச் சாலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் செவ்வாய்க்கிழமை ஊர்ந்து சென்ற வாகனங்கள்.
  • சென்னையில் பெய்த கனமழை காரணமாக மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் தேங்கியிருக்கும் மழை வெள்ளத்தில் நிற்கும் விமானம்.
    சென்னையில் பெய்த கனமழை காரணமாக மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் தேங்கியிருக்கும் மழை வெள்ளத்தில் நிற்கும் விமானம்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, சென்னைப் புறநகர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பெய்த தொடர் மழை காரனமாக பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. பலத்த மழையால் பஸ், ரயில், விமான சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. தண்டவாளங்கள் வெள்ள நீரில் மூழ்கியதால் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் 12 ரயில்கள் செவ்வாய்க்கிழமை ரத்துச் செய்யப்பட்டன.

சென்னை குரோம்பேட்டையில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் பல்லாவரம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்திலும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால் மேலும் நான்கு நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வரும் 7-ஆம் தேதி நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் வடகிழக்கு பருவமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாகவும் இந்தத் தேர்வுகள் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மூத்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (டிசம்பர் 2) விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 4 நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவவும் மீட்புப் பணியில் ஈடுபடவும் போலீஸார், தீயணைப்புப் படையினர், பேரிடர் மீட்புப் படையினர், கடலோரக் காவல் படையினர் தயார் நிலையில் உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

பலத்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி, செம்பரப்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பூண்டி ஏரியிலிருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதமும், செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீததமும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கொட்டித் தீர்த்த மழை: சென்னை, நகரின் சுற்றுப்புறப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.1) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை மொத்தம் 188 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஆகிய இடங்களில் 150 மில்லிமீட்டருக்கு அதிகமாகவும், செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் தலா 130 மில்லிமீட்டருக்கு அதிகமாகவும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, சோழவரத்தில் 110 மில்லிமீட்டருக்கு அதிகமாகவும் மழை பதிவானது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 100 மில்லிமீட்டருக்கு அதிகமாக மழை பதிவானது.

விமானநிலையம் தாற்காலிகமாக மூடப்பட்டது:

சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக விமான நிலையம் தாற்காலிகமாக மூடப்பட்டது. பலத்த மழையால் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது.

சென்னைக்கு வரும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் பெங்களூருக்குத் திருப்பிவிடப்பட்டன.

சென்னை நகரின் சுற்றுப்புறப் பகுதிகள் அனைத்திலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதோடு, நகரின் ஒரு சில பகுதிகளைத் தவிர அனைத்து இடங்களிலும் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது.

கன மழை காரணமாக தனியார் நிறுவனங்களுக்கும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு புதன்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு விடுமுறை: கனமழை காரணமாக, சென்னையில் மூன்று இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு அடுத்த 2 நாள்களுக்கு விடுமுறை விடப்படுவதாக மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் அறிவித்துள்ளார். இந்த நாள்களில் நேர்முகத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் வேறு நாள்களில் முன்பதிவைப் பதிவு செய்து கொள்ளலாம் என அவர் அறிவித்துள்ளார்.

மாநகர பஸ் சேவை: சென்னை நகர் முழுவதும் செவ்வாய்க்கிழமை வெள்ளம் சூழ்ந்தபோதிலும் அலுவலகம் சென்று திரும்பியோர் உள்பட பொது மக்களுக்கு உதவியது சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக பஸ்கள்தான். ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் இருந்தபோதிலும் மாநகர் போக்குவரத்துக் கழக பஸ் சேவை காரணமாக குறிப்பிட்ட இடங்களுக்கு பொது மக்கள் செல்ல முடிந்தது.

எனினும் கன மழை காரணமாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து பஸ் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

வண்டலூரில் ஏரி உடைப்பு: வண்டலூர் அருகே ஏரி உடைந்து ஜிஎஸ்டி சாலையில் வெள்ளம் சூழ்ந்ததால் சென்னை-திருச்சி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்தப் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (டிசம்பர் 2) விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 256 மி.மீட்டர் மழை பதிவு!

சென்னை அதன் சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணியைத் தாண்டியும் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்தது. இதில் சென்னையில் மட்டும் சராசரியாக ஒரே நாளில் 256 மி. மீட்டர் மழை பதிவானது.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 118 மி.மீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 175 மி.மீட்டர் மழையும் பதிவானது.

முதல்வரிடம் தொலைபேசியில் பிரதமர் உறுதி

“”முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 1) தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மீண்டும் மீண்டும் பெய்து வரும் கன மழை காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் பாதிக்கப்பட்டு வருவதையும் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதையும் பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்படுவோரை மீட்பது, நிவாரண நடவடிக்கைகள் உள்பட அனைத்துக்கும் தேவையான முழு ஒத்துழைப்பை மத்திய அரசு அளிக்கும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார். தமிழகம் குறித்த பிரதமரின் அக்கறை, நிவாரணத்துக்கு ஒத்துழைப்புக்கு உறுதி அளிப்பு ஆகியவற்றுக்காக பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

-http://www.dinamani.com

TAGS: