ராஜிவ் வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முடியும்வரை சிறைதண்டனை- உச்சநீதிமன்றம்!

suprem-court

டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள “ஆயுள் தண்டனை” என்பது ஆயுள் முடியும் வரை சிறைதண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதாகும் என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தண்டனையை உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இதனைத் தொடர்ந்து இந்த மூவருடன் இதேவழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரையும் சேர்த்து மொத்தம் 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்ய முடிவெடுத்தது.

ஆனால் மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. விசாரித்த இந்த வழக்கில் எங்கள் ஒப்புதல் இல்லாமல் தமிழக அரசு குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது எனக் கூறி உச்சநீதிமன்றம் போனது மத்திய அரசு.

இதை தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து இன்று தீர்ப்பளித்தது.

இன்று வழங்கிய தீர்ப்பின் மிக முக்கிய அம்சங்கள்:

மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை தமிழக அரசு குறைக்க முடியாது.

சி.பி.ஐ. உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்த வழக்குகளில் தண்டனையை குறைக்க மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு.

ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளின் தண்டனையை தமிழக அரசு குறைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதல் அவசியம்.

இது தொடர்பான அரசியல் சாசன பிரிவில் மத்திய அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறியிருந்தாலும் அதற்கு “ஒப்புதல்” பெற வேண்டும் என்பதே அர்த்தம்.

தண்டனை குறைப்பு எனும் முடிவெடுக்கும் முன்னர் மத்திய அரசின் ஒப்புதலை மாநில அரசு பெற்றாக வேண்டும்.

ஆயுள் தண்டனை என்பது ஆயுட்காலம் முழுவதும் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதாகும். இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

tamil.oneindia.com

TAGS: