சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிக தண்ணீர் வந்ததால் நேற்று 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் அடையாறு ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளத்துடன் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள ஏரி தண்ணீரும் சேர்ந்து வந்ததால் வெள்ளம் அதிகமாகியது.
ஊரப்பாக்கம் ஆதனூர் ஏரியை சிலர் உடைத்து விட்டதால் அந்த காட்டாற்று வெள்ளமும் அடையாறு ஆற்றில் கலந்தது.
இதனால் சுமார் 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் கரைபுரண்டு வந்ததால் சைதாப்பேட்டை பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது. இன்னும் வெள்ளம் குறையவில்லை.
வெள்ளம் குறைய இன்னும் 2 நாட்கள் ஆகும் என தெரிகிறது.
அடையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று தண்ணீர் திறப்பதை 13 ஆயிரம் கனஅடியாக குறைத்துள்ளனர்.
பூண்டி ஏரிக்கு 34,887 கனஅடி தண்ணீர் வருவதால் இன்று 9 ஷட்டர் வழியாக 36,484 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
தாமரைப்பாக்கம் ஏரியில் இருந்து 46,745 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் திருவள்ளூர் மாவட்டம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
புழல் ஏரி நிரம்பி உள்ள நிலையில் ஏரிக்கு 4,906 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் 5,850 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
சோழவரம் ஏரி நிரம்பி இருப்பதால் ஏரிக்கு வரும் உபரி தண்ணீர் முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது.
http://www.newindianews.com