மனசாட்சியற்ற இயற்கையே நிறுத்து உன் கோரத்தாண்டவத்தை!

mazai_koramதற்போது தொடர்ந்துகொண்டிருக்கும் சென்னை அடை மழை வெள்ளத்தால் அந்த சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பையே மிஞ்சி நிற்கிறது போலும்.   தெருக்களில் வெள்ளம், வீட்டுக்குள் தண்ணீர், மாடிகளில் தஞ்சம். குடி நீர்- பால்- அடிப்படை உணவு – மருந்துகளுக்காக அலைபாயும் மக்கள்.

வீடுகளில் தங்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் குடும்பத்தினரை எப்படி பாதுகாப்போம் என்ற திக் திக் பயம் ஒரு பக்கம், அம்மா பசிக்குது என குழந்தை கேட்டுவிடுமோ.. என்ன பதில் சொல்வது என்ற அச்சம் மறு பக்கம், பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு மருந்து மாத்திரைகள் கூட வாங்கித் தர முடியாத நிலையில் இருக்கிறோமே என்ற மனதை நொறுங்க வைக்கும் வேதனை இன்னொரு பக்கம்,

இத்தனை காலம் குருவி சேர்த்தது மாதிரி சேர்த்த பாத்திரம், பண்டம், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பைக், கார் என எல்லாமே கண் முன்னே தண்ணீரில் மூழ்கி வீணாகிப் போய்விட்டதை நினைத்து, இதையெல்லாம் மறுபடியும் சீர் செய்வதையும் முழுவதும் வீணானதை மீண்டும் எப்படி வாங்குவோம் என்ற பெரும் பீதியான நினைவுகளுடனும் வினாடிகளைக் கழிக்கும் சென்னை, கடலூர், திருவள்ளூரின் குடும்பத் தலைவர், குடும்பத் தலைவிகள், வீட்டை நிர்வகிக்கும் மகன்கள், மகள்கள்.

அன்று உழைத்தால் தான் சாப்பாடு என்ற நிலையில் இருக்கும் குடும்பங்கள், வேலைகளுக்குப் போக முடியாமல், வேலைகளே கிடைக்காமல் அடுத்த வேளை உணவுக்குக் கூட கந்து வட்டிக்கு வரிசையில் நின்று காசு வாங்கும் அவலம். ரேசன் கார்டுகள், படித்த படிப்பின் அடையாளங்களான சான்றிதழ்கள், காப்பீட்டு பொலிசிகள், வீட்டுப் பத்திரங்கள், வங்கி பரிவர்த்தனை சான்றுகள் என வாழ்க்கையை நடத்திச் செல்லும் அடையாளங்கள் தண்ணீரோடு போய்விட்ட நிலையில், இதையெல்லாம் எப்படி மீண்டும் பெறுவது என்ற தவிப்பு ஒரு பக்கம்.

மொட்டை மாடிகளில் நின்று கொண்டு வானத்திலிருந்து தண்ணீரையோ, பாலையோ, உணவுப் பொட்டலங்களையோ போட மாட்டார்களா என ஹெலிகாப்டர் சத்தத்துக்காகவும், தெரு வழியே படகோ, அல்லது யாராவதோ வர மாட்டார்களா என கண்களின் கண்ணீருடன் எட்டிப் பார்க்கும் அவலம்.

இப்படி அவரவரர் கண் முன்னே வாழ்க்கையை அப்படியே வாரி எடுத்துக் கொண்டு போய்விட்டது மழையும் வெள்ளமும்.

பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பல பாலங்கள் வெள்ளத்தை தாங்கி நிற்க, பாலாற்றில் சமீபத்தில் கட்டப்பட்ட பாலங்கள் வெள்ளத்தில் உடைந்து போய் அரசியல்வாதிகளின் கமிஷன், காண்ட்ராக்டர்களின் பேராசை அசிங்கத்தை நேரடியாக பார்த்து நொந்து கொள்ள வேண்டிய சூழல்.

தொடர் மழை என்பது தெரியும். பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை தந்து அங்கு பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க வேண்டியது தானே.. அதை விட்டுவிட்டு தினந்தோறும் நாளை விடுமுறை, நாளை விடுமுறை என நீட்டித்துக் கொண்டு இருக்கிறது கல்வித்துறை.

அதை விட முக்கியம் இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உயிர்கள் எத்தனையோ. நாம் காவல் துறை கணக்கை வைத்துக் கொண்டு முடிவுக்கு வர முடியாது. அதே போல வெள்ளத்தோடு போன கார்கள், ஆட்டோக்கள், பைக்குகள் எத்தனையோ. பழுதாகி நிற்கும் இந்த வாகனங்களுக்கு மீண்டும் உயிர் தர ஆயிரக்கணக்கான மெக்கானிக்குகள் இரவு- பகலாக உழைத்தாலும் பல மாதங்கள் ஆகும்.

வீட்டுக்குள் வெள்ளம் வராத மக்கள் தப்பிவிட்டதாக அர்த்தம் இல்லை. அவர்கள் எதையும் வாங்க வெளியே செல்ல முடியாத நிலை.

செப்டிக் டாங்குகள் எல்லாம் நிரம்பி, டாய்லெட்களில் இருந்து எல்லாமே ரிவர்சில் மேலே ஏறி வீடுகளுக்குள் கழிவும் வாசனையும். குழந்தைகள் மருத்துவமனைகள் உள்பட பல மருத்துவமனைகளுக்குள் நீர் புகுந்து பச்சிளம் பிஞ்சுகளையும், நோயாளிகளையும் கொட்டு மழையில் நனைய நனைய வெளியேற்றிய கோரக்காட்சிகள்.

மருத்துவமனை ஊழியர்களையும், பெரும் வெள்ளத்தில் டாக்சிகள், ஆட்டோக்கள் வர முடியாத சூழலில், பஸ்களை இயக்கும் போக்குவரத்துக் கழக டிரைவர்கள், கண்டக்டர்கள், டெப்போ ஊழியர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் அடிக்கலாம். எங்க வீட்டுல 3 பேர் தங்கலாம், நான் ப்ரீயா ரீசார்ஜ் செய்றேன், என்கிட்ட எக்ஸ்ட்ரா கேஸ் சிலிண்டர் இருக்கு, என் வீட்டில் 30 பேருக்கு சாப்பாடு ரெடி.. என்னை தொடர்பு கொள்ளுங்கள் என அழைக்கும் உள்ளங்கள்,

தெருத் தெருவாய் உணவுப் பொட்டலம் ஏந்தியபடி சென்று மக்களுக்கு தரும் இதயங்கள், தனது உயிரை ஒரு கயிற்றிடம் ஒப்படைத்துவிட்டு மற்றவர்களை வலிந்து சென்று மீட்டு வரும் கடவுள்கள்… என சென்னையின் வெள்ளம் மனித நேயத்தையும் வெள்ளமாய் ஓட விட்டிருக்கிறது.

மக்களுக்காக திறக்கப்பட்ட திருமண மண்டபங்கள், திரையரங்குகள் ஒரு பக்கம் என்றால் மக்கள் வந்து தங்கலாம் என அறிவித்த கோவில் கூடங்கள், மசூதிகள் என எல்லா புறமும் மதம் வென்ற நிகழ்வுகள். ட்விட்டர், பேஸ்புக்கை ஒரு சமுதாயம் எப்படி உண்மையிலேயே உருப்படியாக உபயோகிக்கலாம் என செல்ஃபி புள்ளைகளுக்கு பாடம் கற்பித்துள்ளது இந்த மழை.

அங்கே மாடியில் ஒரு கர்ப்பிணி சிக்கியுள்ளார், இதோ இங்கே ஒரு குழந்தைக்கு பால் தேவை.. தர முடியுமா?. என்னிடம் உள்ள இந்த உணவை யாராவது எடுத்துச் சென்று மற்றவர்களுக்குத் தர முடியுமா என்ற கோரிக்கைகள், ஏக்கங்களை ஏந்திச் சென்று வருகின்றன சமூக வலைத்தளங்கள்.

கண்மாய்களை அந்ததந்த கிராம மக்களே தூர் வாரி வந்த விதியை மாற்றி, இனி அதை அரசே செய்யும் என அறிவித்து, தூர் வாராமல், அப்படியே தூர் வாரினாலும் அதையும் அரைகுறையாக செய்து, அதில் 45 சதவீதம் கமிஷன் அடித்துத் தின்று, உடம்பை வளர்த்து, தங்கள் குடும்பப் பெண்களுக்கு நகை, சொத்துக்களை வாங்கிக் குவித்துக் கொண்ட ஒன்றியச் செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள், கட்சியின் பிற பிரிவுகளின் கரைவேட்டிகள், கூடவே சேர்ந்து கொள்ளையடித்த காண்ட்ராக்டர்கள் ஆகியோரை சகித்துக் கொண்டதால் மக்களுக்கு இந்த தண்டனை. தூர் வாரப்படாத கண்மாய்கள், ஏரிகள் அதிக நீரை தேக்கி வைக்க முடியாமல் அதை வெளியேற்ற, அந்த நீர் செல்லும் வழிகளான ஓடைகள், கால்வாய்களை கமிஷன் வாங்கிக் கொண்டு, பட்டா போட்டுத் தந்து வீடு கட்ட வைத்த அரசியல்வாதிகளால், ஒழுங்காக- நேர்மையாக வீடு கட்டியவர்களின் வீடுகளுக்குள் தண்ணீர்.

இவ்வளவு பிரச்சனையில் சென்னையில் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து அத்தியாவசிய தேவைகளின்றி அல்லல்படுவதை கண்கெட்ட கடவுளே இம்மக்கள் மீது இரக்கம் காட்டு, மனசாட்சியற்ற இயற்கையேூன் கோரத்தாண்டவத்தை உடனே நிறுத்து!

-http://www.newindianews.com

TAGS: