தொடர் மழையால் தீவாக மாறிய கடலூர் நகரம்… மீண்டும் கனமழை – கண்டுக்க ஆள் இல்லையே?

kadaloorகடலூர்: கடலூர் மாவட்டத்தில் மீண்டும் கொட்டி வரும் பலத்த மழையால் கெடிலம் ஆற்றின் கரை உடைந்ததால் கடலூர் நகரமே வெள்ளத்தில் மிதந்து வருகிறது. தனித்தீவாக மாறிய கடலூர் மாவட்டத்தை கண்டுகொள்ள ஆள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் அதாவது நவம்பர் 8ம்தேதி பெய்த கன மழையால் கடலூர் மாவட்டமே வெள்ளக்கடாக மாறியது. இந்த ஆண்டு வெள்ளதீபாவளியாக மாறிப்போனது கடலூர் மாவட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் மேற்கொள்ளப் பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பி வந்த நிலையில் கடந்த 3 நாட்ளாக கடலூர் மாவட்டத்தில் மீண்டும் கொட்டிய கன மழையால் மீண்டும் வெள்ளம் சூழ்ந்து தீவு போல் காட்சி அளிக்கிறது.

கடலூர் நகரில் அனைத்து தெருக்களிலும் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இன்று காலை ஓரளவு மழை ஓய்ந்திருந்தாலும் மழைநீர் வடிய வில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகின்றது. பலர் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் வீட்டிலேயே முடங்கிபோய் உள்ளனர். கரைபுரண்ட வெள்ளம் கடலூர் நகரில் பெரும்பாலான கடைகள் மூடியே கிடக்கிறது.

கடந்த 3 நாட்களாக பெய்த பலத்த மழையால் கெடிலம் ஆறு, தென்பெண்ணையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்கள் மழையால் பாதிப்புக்குள்ளானவர்களை மீட்டு தங்க வைக்க 100க்கும் மேற்பட்ட முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த முகாம்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தொடர் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகள் உடையாமல் தடுக்க ஏரிகளை சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் தற்போது 3வது முறையாக மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. கெடிலம் ஆற்றில் 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் சீறி பாய்வதால் கம்மியம்பேட்டை, திருவந்திபுரம், கோண்டூர் உள்ளிட்ட இடங்களில் கெடிலம் ஆற்றின் கரைகள் உடைந்தது.

இதனால் 50க்கும் மேற்பட்ட நகர்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. மின்சாரம் துண்டிப்பு கரையோர பகுதிகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் நகரில் பிரதான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வீடுகளில் மக்கள் முடங்கி உள்ளனர். மின்சாரம் பல்வேறு இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: