100 ஆண்டுகளின் பின்னர் சென்னையில் ஏற்பட்ட பேரிடர்! பாராளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் தகவல்

rajnath_singh_001சென்னை வெள்ள சேதம் மிக அபாயகரமான சூழ்நிலையில் இருப்பதாக இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் முதல் விவாதம் நடந்து வந்தது. மேலும் புதுச்சேரி, ஆந்திரா வெள்ளச்சேதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்துக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பதிலளித்து பேசினார்.

சென்னையில் வழக்கமாக டிசம்பர் மாதம் முழுவதும் 250 மி.மீ. மழையே பெய்யும். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் 2-ந்தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டுமே 330 மி.மீ. அளவுக்கு கனமழை பெய்துள்ளது. அந்தவகையில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் மழை பெய்துள்ளது. மேலும் 2 அல்லது 3 நாட்களுக்கு கடும் மழை நீடிக்கும் என்று வானிலை இலாகா கூறியுள்ளது.

மழை வெள்ளத்தால் சென்னை மிகவும் மோசமான அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளது. தேசிய மற்றும் மாநில சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு சென்னை நகரம் ஒரு தீவாக மாறியுள்ளது என்றால் மிகையல்ல.

நிலைமை மிக அபாயகரமான சூழ்நிலையில் உள்ளது. சாலை, ரெயில் மற்றும் விமான போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டு உள்ளதால், நிவாரண பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தொலைத்தொடர்பு வசதிகளை பொறுத்தவரை தரைவழி தொலைப்பேசி இணைப்புகள் 60 சதவீதம் வரையும், 40 சதவீதம் அளவுக்கு செல்போன் சேவைகளும் துண்டிக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் தற்போது பெய்துள்ள மழையில் சுமார் 269 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 2 பேரும், ஆந்திராவில் 54 பேரும் இறந்துள்ளனர். மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட சென்னையில் மீட்பு பணிகளுக்காக கடற்படைக்கு சொந்தமான 12 படகுகள் மற்றும் 155 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் தேசிய பேரிடர் மேலாண்மைக்குழுவை சேர்ந்த 14 பிரிவு வீரர்களை விமானப்படையும் அனுப்பியுள்ளது. தமிழக மழை வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.8 ஆயிரத்து 481 கோடி நிதி வேண்டும் என மாநில அரசு கேட்டுள்ளது.இதற்கு முதற்கட்டமாக ரூ.940.92 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. அங்கு பார்வையிட்டு திரும்பியுள்ள மத்தியக்குழுவின் அறிக்கைப்படி மேலும் நிதியுதவி வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

-http://www.newindianews.com
TAGS: