‘வரைமுறையற்ற வளர்ச்சியே, சென்னை நகரில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு முக்கியக் காரணம்’ என்று, டில்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது
சென்னையில், வரலாறு காணாத அளவுக்கு, அதீத மழை பெய்ததற்கும், பருவநிலை மாற்றத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக, சூழல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
கனமழையால் சென்னைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, ஆய்வு செய்துள்ள டில்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், ‘வரைமுறையற்ற வளர்ச்சியே, இதற்கு மிக முக்கியக் காரணம்’ என்று, தெரிவித்துள்ளது.
மவுலிவாக்கம் கட்டட விபத்தின் போது, இந்த மையம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், ‘போரூர் ஏரிப்பகுதியில், இந்த கட்டிடம் கட்டப்பட்டதும், அது இடிவதற்கு முக்கியக் காரணம்’ என்று குறிப்பிட்டிருந்தது.
நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு, பயன் படுத்தப்பட வேண்டிய நீர் நிலைகளில், கட்டடங்களைக் கட்டுவதற்கு, தமிழக அரசு தொடர்ச்சியாக அனுமதியளித்து வருவதாக மையம், இப்போது குற்றம் சாட்டியுள்ளது.
‘கோடை காலங்களில், தண்ணீர் தட்டுப்பாட்டையும், மழைக்காலங்களில் வெள்ளத்தையும் அனுபவித்து வரும் ஒரே நகரம் சென்னை’ என்று குறிப்பிடும் இந்த மையத்தின் ஆய்வறிக்கை, ‘தண்ணீரைச் சேமிக்கவும், மழை நீர் வடிகால்களை முறையாக அமைக்கவும் முயற்சி எடுக்காததே, இந்த நிலைக்குக் காரணம்.
இயற்கையான நீர் வழிப்பாதைகளை மூடியதன் விளைவை, சென்னை நகரம் அனுபவிக்கிறது’ என்று தெரிவித்துள்ளது.
கடந்த, 1980களில், 600க்கும் அதிகமான நீர் நிலைகளைக் கொண்டிருந்த சென்னை நகருக்கான, 2008 மாஸ்டர் பிளானில், பெரும்பாலான நீர் நிலைகளைக் காணவில்லை.
அப்போது, 2,792 ஏக்கர் பரப்பிலிருந்த, 19 பெரிய ஏரிகளின் பரப்பு, 2000வது ஆண்டில், 1,594 ஏக்கராகக் குறைந்துள்ளதாகக் கூறும் நீர் வள ஆதார அமைப்பின் புள்ளி விவரங்களை, அறிவியல் மையம், தனது கருத்துக்கு ஆதாரமாகக் காண்பிக்கிறது.
சென்னை நகரில், 2,847 கி.மீ., துாரத்துக்கு சாலைகள் இருக்கும் நிலையில், வெறும், 855 கி.மீ., நீளத்துக்கு மட்டுமே, மழை நீர் வடிகால் இருப்பதையும் இந்த மையத்தின் ஆய்வறிக்கை, குறிப்பிடுகிறது.
பெருநகரப் பகுதியிலுள்ள, 75 குளங்களின் உபரி நீர், கூவத்துக்கும், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட, 450 நீர்நிலைகளின் உபரிநீர், அடையாறுக்கும் வருவதால், இயற்கை நீர் வழிப்பாதைகளைக் காப்பதன் அவசியத்தையும் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.ஒரே நாளில், 374 மில்லி மீட்டர் மழை பெய்திருப்பதன் மூலமாக, நுாறாண்டு கால மழைச்சாதனையை, இந்த மழை முறியடித்திருக்கிறது.
வழக்கமாக, நவம்பரில், 407 மி.மீ., அளவுக்குப் பெய்யும் மழை, இந்த ஆண்டில், 1,218 மி.மீ., அளவுக்குப் பெய்துள்ளது. இவ்வாறு, ஒரே நாளில் அதீத மழை பெய்வதற்கும், பருவநிலை மாற்றத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக, புனே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த கருத்தை சுட்டிக்காட்டும் டில்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் ஆய்வறிக்கை, ‘சென்னை பேரழிவுக்கும், பருவநிலை மாற்றத்துக்கும் நிச்சயம் தொடர்புள்ளது’ என்றும், அழுத்தமாகத் தெரிவித்துள்ளது.
நீர் மூலம்… நிர்மூலம்!
டில்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் இயக்குனர் சுனிதா நாராயண், ‘மும்பை, டில்லி, கொல்கத்தா, சென்னை, ஸ்ரீநகர் ஆகிய நகரங்களில், நீர் நிலைகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
குறிப்பாக, சென்னையில் ஏராளமான நீர் நிலைகளையும், நீர் வழிப்பாதைகளையும் மூடி, கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. தண்ணீர் செல்லும் வழிகளைத் தேடுவதற்குப் பதிலாக, கட்டடம் கட்டவே நீர் நிலைகளை அரசு நிர்வாகம் தேடுகிறது’ என்று இந்த அறிக்கையில் கடுமையாக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
-http://www.newindianews.com