சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடல் போல் வெள்ளம் தேங்கியுள்ள நிலையில், உடல்களும் கிடப்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு நாட்களாக மழை, தனது ஆக்ரோஷ தாக்குதலை நிறுத்தி உள்ளதால், வெள்ள நீர் சற்று குறைந்து, மொட்டை மாடிகளில் தவம் கிடந்தோர், வெளியேற முயல்கின்றனர்.
இதனிடையே பலர், வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர். அவர்களது உடல்கள், வெள்ளத்தில் மிதப்பதாக, மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர் கூறுகின்றனர்.
கால்நடைகள், செல்லப் பிராணிகள், பன்றிகள் உள்ளிட்ட விலங்கினங்களும், வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளன.
வெள்ளம் முற்றும் வடிந்தால் மட்டுமே, இந்த உடல்களை மீட்க முடியும். அதற்குள் உடல்கள் அழுகி, நாற்றம் எடுக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால், வெள்ளப் பகுதிகளில், தொற்று நோய் வேகமாக பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து, தமிழக பொது சுகாதார சங்க தலைவர் இளங்கோ கூறியதாவது:
வெள்ளப் பகுதி மக்களுக்கு மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, வாந்தி, விஷப்பூச்சிகளால் ஏற்படும்
பாதிப்புகள், சிறுநீர் பாதை தொற்று, கர்ப்பப்பை தொற்று, தோல் நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
குழந்தைகள், பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும்; தட்பவெப்பநிலை மாற்றத்தால், நுரையீரலில் சளி கட்டி வெளியேறாமல் நிமோனியா காய்ச்சல் ஏற்படும்;
இது, இறப்புக்கு வழி வகுத்துவிடும். இவர்களுக்கு கதகதப்பான உடைகள், போர்வை அளிப்பது அவசியம்.பல நோய்களுக்கு மருந்து கிடைக்காமல், நோயாளிகளும் பாதிக்க வாய்ப்புள்ளது.
இதனால், தமிழக அரசு சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். படகில் சென்றாவது ,இந்த உதவிகள் தருவது அவசியம்.மக்களை மீட்பது மட்டுமல்ல, மனித உடல்கள், இறந்த கால்நடைகளையும் மீட்க, தனிப் பிரிவு வேண்டும். மிதக்கும் உடல்களைக் கண்டெடுத்து, பொது சுகாதார விதிமுறைகளின் படி அகற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
708 மருத்துவ முகாம் அரசு அவசர ஏற்பாடு:
தொற்று நோய் பரவாமல் தடுக்க, இன்று முதல், 708 முகாம்கள் நடத்த உள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:சென்னையில் மாநகராட்சி சார்பில், 206 முகாம்கள் நடத்தப்படுகின்றன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 92 நடமாடும் மருத்துவக் குழுக்கள் செயல்பாட்டில் உள்ளன.
அரசு மருத்துவக் கல்லுாரிகள் சார்பில், இன்று முதல், 200 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.இதுதவிர, முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள,
தனியார் மருத்துவமனைகள் சார்பில், 100; அரசு சித்த மருத்துவக் கல்லுாரி சார்பில், 100 சித்த மருத்துவ முகாம்களும் இன்று துவங்குகின்றன.
மொத்தம், 708 முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செல்ல முடியாத இடங்களுக்கு சிறு வாகனங்கள், படகுகள் மூலமும் மருத்துவக் குழு செல்லும். தொற்று நோய் பரவாத வகையில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
-http://www.newindianews.com