சென்னை: மழை விட்டு விட்டது.. ஆனால் தூவானம் விடவில்லை என்ற கதையாக, ஊரெல்லாம் பெரும் குப்பை சேர்ந்து சென்னையே துர்நாற்ற நகரமாக மாறியுள்ளது. மலை மலையாக குப்பை தலைநகரின் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கிக் கிடக்கிறது. குப்பைகளை அகற்று மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது. பெரும் சிரமமான பணியாகவும் மாறியுள்ளது. உள்ளூர் துப்புறவுத் தொழிலாளர்களால் இதை அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், பல்வேறு ஊர்களிலிருந்தும் துப்புறவுத் தொழிலாளர்கள் வந்துள்ளனர். மும்முரமாக தலைநகரை சுத்தப்படுத்தும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இன்ன குப்பைதான் சேருவது என்று இல்லாமல் இந்த பெரு மழைக்கு வீட்டில் உள்ள அத்தனை பொருட்களும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு குப்பையாக நகரைச் சூழந்துள்ளன.
பல ஆயிரக்கணக்கான வீடுகளில் கூண்டோடு ஒரு பொருளும் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. கட்டில், மெத்தை, பீரோ, டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் என பல பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் தேங்கிக் கிடப்பதால் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. அடையாற்றில் பெருக்கெடுத்த பெரும் வெள்ளத்தில் சிக்கி வந்த பொருட்கள், மாடு, ஆடு உள்ளிட்ட விலங்குகளின் இறந்த உடல்கள் தெருக்களில் தேங்கிக் கிடப்பதால் நோய்த் தொற்று ஏற்படும் ஆபத்துகளும் அதிகரித்துள்ளன.
பல பகுதிகளில் மழை நீர் வெள்ளத்துடன் வீட்டுக் கழிவு நீரும் கலந்து தேங்கிக் கிடக்கிறது. வேளச்சேரி, கொரட்டூர், அம்பத்தூர், முகப்பேர், தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்னும் மழை நீர் முழுமையாக வடியவில்லை.
தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறை எடுத்து வருகிறது. ஆனால் அது போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் லெப்டோஸ்பைரோசிஸ் நோயும் பரவும் அபாயம் உள்ளது. இறந்த விலங்குகளின் உடல் சிதைவுகள் நீரில் கலந்து அதன் மூலம் இந்த நோய் பரவும். இது மிகவும் அபாயகரமானது. மும்பையில் முன்பு மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டபோது இந்தப் பிரச்சினை அங்கு ஏற்பட்டது என்பது நினைவிருக்கலாம்.