மழையால் பாதிக்கப்பட்டது சென்னை மட்டும் அல்ல.. ஒட்டுமொத்த இந்தியாவும் தான்..!

chennai-rainசென்னை: உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கும் இந்தச் சூழ்நிலையில் நாட்டின் முக்கியப் பொருளாதார மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில் மழை வெள்ளம் மக்களை மட்டும் அல்லாமல் வர்த்தகத்தையும் பாதித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பு உண்டாகும் அளவிற்கு மழை வெள்ளம் தமிழ்நாட்டைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் சில இடங்களில் பெய்த கன மழை வெள்ளமாக மாறி தமிழக மக்களை அதிகளவில் பாதித்துள்ளது. மேலும் நாட்டின் முக்கியத் தொழில்துறையின் பல முக்கிய நிறுவனங்களின் தலைநகரம் சென்னையில் உள்ளதால் ஒட்டுமொத்த இந்தியாவும் பாதிப்படைந்துள்ளது.

சென்னை மழை வெள்ளத்தால் தமிழ்நாடு சுமார் 15,000 கோடி ரூபாய் அளவிலான இழப்புகளைச் சந்தித்துள்ளதாக அசோசாம் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளது.

சென்னை வெள்ளம் நிவாரண நிதியாக, மத்திய அரசு தமிழகத்திற்கு 940 கோடி ரூபாய் அறிவித்த நிலையில், சென்னை மற்றும் பிற முக்கியப் பகுதிகளைப் பார்வையிட்ட பிரதமர் மோடி கூடுதலாக 1,000 கோடி ரூபாய் நிதியுதவியை அளித்தார். இதனால் தமிழக அரசிற்கு மத்திய அரசின் சார்பாகச் சுமார் 1,940 கோடி ரூபாய் நிவாரண நிதியாகக் கிடைத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்திய மக்கள் பல பகுதிகளில் இருந்து பல வழிகளில் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் நிதி மற்றும் பொருள் உதவி அளித்து வருகின்றனர்.

மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஐடி நிறுவனங்களில் வெள்ளம் நீர் புகுந்துள்ளதால் இத்துறை முழுமையாக முடங்கியது. இதனால் இந்திய ஐடித்துறையில் சென்னை அலுவலகங்களின் பங்கீடு அதிகளவில் குறைந்துள்ளது. தற்போது ஹெச்பி, அக்சென்சூர், டிசிஎஸ், சிடிஎஸ், டெக் மஹிந்திரா போன்ற முக்கிய நிறுவன பணியாளர்களைச் சென்னை மற்றும் பிற நகர அலுவலகங்களுக்கு இடம் மாற்றி வருகின்றனர். இந்தியாவில் மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் சுமார் 24 சதவீத பங்கு வகிக்கிறது. அதிலும் முக்கியமாகப் பன்னாட்டு வங்கிகளுக்குத் தொழில்நுட்ப சேவை அளிக்கும் பல நிறுவனங்கள் சென்னையில் உள்ளதால், வங்கிகளின் சேவையும் கணிசமாகப் பாதித்துள்ளது.

இந்திய வாகனம் மற்றும் ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்கள் தயாரிப்பு மற்றும் உற்பத்தியில் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இந்நிலையில் சென்னையில் தொடர்ந்த பெய்த கன மழையால் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் இயக்கம் முழுமையாக முடங்கி உற்பத்தி பாதித்தது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் மட்டும் போர்டு, டையம்லர், நிசான், டிவிஎஸ், ஹூண்டாய், ரெனால்ட்-நிசான், அசோக் லெய்லாண்டு, ராயல் என்பீல்ட் எனப் பல முக்கிய நிறுவனங்கள் உள்ளது. இந்நிறுவனங்கள் சென்னை தொழிற்சாலைகளில் செய்யும் உற்பத்தி இந்தியா மட்டும் அல்லாமல் ஐரோப்பா, ஆமெரிக்கா, மற்றும் ஆசியா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பல தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பணிகள் முழுமையாக முடங்கியுள்ளது.

குறிப்பாக இந்தியாவின் 3வது மிகப்பெரிய இருசக்கர வாகன விற்பனை நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ், சென்னையில் நிலவி வரும் தொடர் மழை வெள்ளத்தால் 15,000 வாகனங்களின் விற்பனை இழந்துள்ளது. அதேபோல் போர்டு நிறுவனத்தின் 2 வாகனங்களின் விற்பனை முடங்கியுள்ளது.

கடந்த 30 நாட்களில் பெய்த மழையால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் கடலூரில் உள்ள தொழிற்சாலையின் உற்பத்தி அதிகளவில் பாதித்து மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளது. இதனால் நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி, மற்றும் உற்பத்தியில் பாதிப்படைந்துள்ளது.

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் வர்த்தகம் அதிகளவில் பாதித்து ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனப் பங்குகள் அனைத்தும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் இத்துறையில் முதலீட்டு அளவுகள் குறைந்துள்ளது.

மேலும் மழை வெள்ளத்தால் ஈகாமர்ஸ் துறையில், நுகர்வோர் பொருட்களின் ஷாப்பிங், பஸ் புக்கிங் போன்ற பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதம் பெய்த தொடர் மழையால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு செல்ல வேண்டிய உணவுப் பொருட்கள் போக்குவரத்து முடங்கியதால் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் காய்கறிகளின் விலை தாறுமாறான விலையில் விற்கப்பட்டன. இதனால் போக்குவரத்துத் துறையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

தமிழ்நாட்டு மக்களால் வெகு விமர்சியாகக் கொண்டாப்படும் தீபாவளி பண்டிகை இந்த வரும் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் 5000 கோடி ரூபாய் மதிப்புடை இந்த விழாவின் வர்த்தகம் சுமார் 50 சதவீதம் சரிந்துள்ளது.

மக்கள் தங்களது வீடு மற்றும் உடைமைகளை இழந்து ஒரு பக்கம் தவிக்கும் நிலையில், மற்றொரு பக்கம் சென்னையில் அதிகளவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பல உற்பத்தி நிறுவனங்களின் நிலையைப் பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது. இவர்களின் இழப்பை இன்சூரன்ஸ் மூலம் பெறலாம் என்றால் அதற்கும் ஒரு பிரச்சனை உள்ளது.

தற்போதைய மழை வெள்ளத்திஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டின் தொகையின் கணக்கீடு சுமார் 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. இதனால் காப்பீடு கோரப்படும் அனைவருக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு தொகை அளிக்குமா என்றால் சந்தேகமே..?

ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடு மற்றும் கடை உரிமையாளர்கள், மோட்டார் வாகனங்களை வைத்துள்ளவர்கள் எனச் சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு இன்சூரன்ஸ் கிளைமிற்காகக் கோரப்பட்டுள்ளது என யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியான மிலின்ட் காரட் தெரிவித்தார்.

-http://tamil.goodreturns.in

TAGS: