நிவாரண பொருட்களை பறித்து செல்லும் கும்பல்- தவிக்கும் தன்னார்வ குழுக்கள்; அமைதி காக்கும் காவல்துறை!

rain-helpகடலுார்: கடலூர் வெள்ள பாதிப்பில் சிக்கி தவித்து வரும் மக்களுக்கு கருணை உள்ளத்துடன் சிலர் கொண்டு வருகின்ற நிவாரணப் பொருட்களையும் ரவுடிகளும், சமூக விரோதிகளும் பறித்துச் செல்வதாக மக்களிடையே புகார்கள் குவிந்து வருகின்றன. தமிழகத்தில் பெய்து வரும் கனமழையில் சென்னையை விட பெருமளவில் பாதிக்கப்பட்ட மாவட்டம் கடலூர். அங்கு அரசு ஊழியர்களுடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனங்களும், அமைப்புகளும் வெள்ள பாதிப்பில் சிக்கிய மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர். தமிழகத்தின் அத்தனை இடங்களிலிருந்தும் சென்னை மற்றும் கடலூருக்கு பல தொண்டு நிறுவனங்கள் தங்களால் முடிந்த நிவாரணப்பொருட்கள் உணவு மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்களை பெரிய பெரிய வாகனங்களில் தினம் தினம் அனுப்பி வருகின்றனர்.

அப்படி வரும் வாகனங்களை கடலூருக்கு முன்னதாகவே வழிமறித்து சில சமூக விரோதிகளும், ரவுடிகளும் அதை தங்கள் பகுதிக்கு எடுத்துச் செல்வதாக புகார் கூறுகின்றனர்.

வாகனத்தில் வரும் தன்னார்வலர்கள் இதனால் அதிர்ச்சியாகி என்னசெய்வதென்று புரியாமல் அவர்கள் சொல்லும் இடத்திற்கு செல்கின்றனர். பெரும்பாலும் இந்த கும்பல் அதிகளவு பாதிக்கப்படாத நிலையிலும் கொடுமையாக நிவாரணப் பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களை அந்தந்த ஊர்களில் வழிமறித்து திசை திருப்பி அனுப்புகின்றனர். கையில் ஆயுதங்களுடன் மிரட்டி வாகனங்களை வழிமறிக்கும் இவர்களை காவல்துறையும் கண்டு கொள்வதில்லை என்கின்றனர். காரணம் அவர்கள் அந்த ஊரில் செல்வாக்கான மனிதர்கள் என்பதுதான்.

இது ஒருபுறமிருக்க தொண்டு நிறுவனங்கள் பல கடலுார் ஆட்சியரிடம் தங்கள் நிவாரணப்பொருட்களை ஒப்படைத்து செல்வதால் ஆட்சியர் அலுவலகத்தில் அரசியல் வியாதிகளின் நடமாட்ட அதிகரித்துள்ளது. ஆளும் கட்சி என்றோ, எதிர்க்கட்சி என்றோ டமாரம் அடிக்கும் அவர்கள் தங்கள் பகுதிகளுக்கு நிவாரணப்பொருட்களை பெற்று வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு எடுத்துச்செல்லப்படும் பொருட்கள் உரியவர்களுக்கு போய்ச் சேர்கிறதா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

தாமாகவே முன்வந்து தன்னார்வலர்களும் தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு உதவ முன் வரும்போது அவற்றை முறையாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பிக்க மாவட்ட நிர்வாகம் முறையான வழிமுறைகளை ஏற்படுத்தாத காரணத்தினால் ஏற்படும் இந்த இன்னல்கள் வெள்ள பாதிப்பை விட அதிக வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது கடலுார் மாவட்ட மக்களுக்கு என்பது நெஞ்சை சுடும் உண்மை.

tamil.oneindia.com

TAGS: