சென்னை மழை வெள்ளத்தால் விமான நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி இழப்பு

cxcxசென்னை, டிச. 10–சென்னையில் கடந்த வாரம் பெய்த பலத்த மழை அனைத்துத் தரப்பினருக்கும் பெரும் இழப்புகளை ஏற்படுத்தி விட்டது. தொழில்துறையினர் தங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணித்துள்ளனர்.

வெள்ள பாதிப்புக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையமும் தப்பவில்லை. நவம்பர் 30–ந்தேதி, டிசம்பர் 1–ந்தேதி பெய்த அடை மழை சென்னை விமான நிலையத்தை வெள்ளத்தில் மிதக்க வைத்தது.

ஓடுபாதைகளில் மழை வெள்ளம் கரை புரண்டோடியதால் விமானங்கள் வருவதும், புறப்படுவதும் முடங்கியது. இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையம் 2–ந்தேதி முதல் 5–ந்தேதி வரை மூடப்பட்டது. 6–ந்தேதி மதியம் தான் மீனப்பாக்கம் விமான நிலையம் செயல்பட தொடங்கியது.

மீனம்பாக்கம் விமான நிலையத்துக்குள் மழை வெள்ளம் எப்படி புகுந்தது என்பதை அதிகாரிகளால் முதலில் கணிக்கவும் முடியவில்லை. கண்டுபிடிக்கவும் இயலவில்லை.

முதலில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர்தான் அடையாறு ஆற்றில் கரை புரண்டோடி வந்து மீனம்பாக்கம் விமான நிலையத்துக்குள் வந்து விட்டதாக கருதப்பட்டது. பிறகு மணப்பாக்கம் ஏரி தண்ணீர் நிரம்பி விமான நிலையத்துக்குள் வந்ததாக கூறப்பட்டது.

ஆனால் இடைவிடாத ஆய்வுக்குப் பிறகே பல்லாவரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கரைபுரண்டு வந்து விமான நிலையத்துக்குள் புகுந்து விட்டது தெரிய வந்தது.

பல்லாவரம் மற்றும் மீனம்பாக்கம் பகுதிகளில் உள்ள கழிவு நீர் வெளியேற அடையாறு ஆறு வரை பாதாள சாக்கடை திட்டம் உள்ளது. இந்த கழிவு நீர் பாதை விமான நிலையத்தை கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் வரலாறு காணாத மழை பெய்த போது இந்த கழிவுநீர் பாதைகளில் அளவு கடந்த தண்ணீர் சென்றது.

அதே சமயத்தில் அடையாறு ஆற்றிலும் வெள்ளம் கரை புரண்டோடியது. இதனால் பல்லாவரம், மீனம்பாக்கம் பகுதி மழை வெள்ளம் அடையாறு ஆற்றுக்குள் சென்று வடிய முடியாமல் விமான நிலையத்துக்குள் புகுந்து விட்டது. இதை தடுக்க அதிகாரிகள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

விமான நிலையத்தின் முக்கிய ஓடுபாதை அருகே இருந்த சிறு, சிறு கழிவு நீர் பாதை வழியாக தண்ணீர் கொப்பளித்தபடி வந்தது. சில மணி நேரங்களில் அந்த தண்ணீர் சென்னை விமான நிலையத்தையே பெரிய குளம் போல மாற்றி விட்டது.

செவ்வாய்க்கிழமை பெய்த பேய் மழை விமான நிலையத்தில் அலை அடிக்கும் அளவுக்கு வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி விட்டது. அந்த சமயத்தில் சுமார் 20 விமானங்கள் அங்கு இருந்தன. அதில் சில விமானங்களை வெள்ளம் இழுத்து சென்றது. 2 பெரிய விமானங்களை இழுத்து சென்று வனப்பகுதிக்குள் வெள்ளம் புரட்டி போட்டிருந்தது.

ஓடு பாதையின் மையப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஓரிரு விமானங்கள் மட்டுமே தப்பின. மற்ற எல்லா விமானங்களும் வெள்ள நீரில் மிதந்தன. இதில் அவை கடுமையாக சேதம் அடைந்துள்ளன.

விமான நிலையம் வெள்ளத்தில் மிதந்த போது ஜாய் ஆலுக்காஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ் உள்பட 15 பெரிய நிறுவனங்களுக்கு சொந்தமான சிறிய ரக விமானங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றில் 7 விமானங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்து விட்டது.

2 தனியார் குட்டி விமானங்கள் முழுமையாக மூழ்கியது. இதில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்க பல கோடி செலவாகும் என்று தெரிகிறது.

கடலோர காவல் படைக்கும் இந்த மழை வெள்ளத்தால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தின் ஒரு பகுதியில் கடலோர காவல் படைக்கு சொந்தமான விமானங்களும் ஹெலிகாப்டர்களும் நிறுத்தப்பட்டிருந்தன.

இதில் 5 சிறு ரக விமானங்கள், 2 ஹெலிகாப்டர்களுக்குள் வெள்ளம் புகுந்தது. எனவே இந்த 7 விமானங்களையும் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் சீரமைக்க குறைந்தபட்சம் ரூ.50 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்துக்குள் புகுந்த வெள்ளத்தால் சுமார் 35 விமானங்கள் சேதத்தை சந்தித்துள்ளன. தனியார் விமான நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான சேவை 5 நாட்கள் முடங்கியது.

இதனால் விமான நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு பல்லாயிரக்கணக்கான பயணிகளும் தவிர்க்க நேரிட்டது.

சென்னை விமான நிலையத்தில் வெள்ளம் முழுமையாக வடிந்து விட்டாலும் இன்னமும் 100 சதவீத இயல்பு நிலை திரும்பவில்லை.

-http://www.maalaimalar.com

TAGS: