சென்னை வெள்ள பாதிப்பு காரணம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும்

g-ramakrishnanமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழையோடு ஏரிகளிலிருந்து திடீரென்று அதிகமான அளவில் திறந்துவிடப்பட்ட வெள்ள நீரும் சேர்ந்து உயிர், உடமை, கட்டமைப்புகள், சேதாரங்கள், வரலாறு காணாத அளவில் ஏற்பட்டிருக்கிறது என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. மழைப் பொழிவு அதிகமிருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி அறிவிப்புகள் தொடர்ச்சியாக எச்சரித்து வந்த போதிலும் தமிழக அரசு நிர்வாகம் எவ்வித அவசர உணர்வுமின்றி செயல்படாமல் இருந்திருக்கிறது. இதன் காரணமாகவே இன்று சென்னை மக்கள் சொல்லொணா துயரத்தையும், ஈடுகட்ட முடியாத இழப்பையும், அழிக்க முடியாத அச்சத்தையும் அனுபவித்து வருகிறார்கள்.

டைம்ஸ் ஆப் இந்தியா, தி இந்து, ஆனந்த விகடன் உள்ளிட்ட பத்திரிகைகள் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள விபரங்களின் படி உரிய காலத்தில் நிலைமைக்கேற்றவாறு ஏரிகளில் நீர் வெளியேற்றத்தை செய்யாததாலேயே கடைசி நேரத்தில் எவ்வித கட்டுப்பாடும், முன்னறிவிப்பும், முன்யோசனையுமின்றி ஏரிகளிலிருந்து ஏராளமான நீர் திடீரென்று திறந்து விடப்பட்டிருக்கிறது. ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து இருப்பதாகவும், மேலும் நீர்வரத்து அதிகரித்து வருவதாகவும் திறந்து விட அனுமதிக்க வேண்டுமென்றும் நவம்பர் 18ந் தேதியன்று அனுப்பப்பட்ட கோப்புகள் 10 நாட்களுக்கு மேல் முடிவெடுக்காமல் வைக்கப்பட்டிருந்ததன் காரணமாகவே இத்தகைய பேரழிவுக்கு காரணமான தண்ணீர் திறப்பு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

எனவே தற்போது நிகழ்ந்துள்ள அழிவும், பேரிடரும், பெரும் துயரமும், இயற்கையின் சீற்றத்தை விட அதிகார அமைப்பின் அவசர தலையீடு இல்லாத தன்மையால் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை. எனவே தமிழக அரசு ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிப்படி தண்ணீர் வெளியேற்றுவது நடக்காமல் போனதற்கான காரணத்தை ஆராய்ந்து தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய காலத்தில் முடிவெடுக்காதவர்கள் மற்றும் கடந்த கால நடைமுறைகளை மாற்றி கள நிலவரத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் முடிவெடுக்கும் நடைமுறை மாற்றப்பட்டதற்கு காரணமானவர்கள் ஆகியோர் மீது கிரிமினல் நெக்லிஜன்ஸ் (ஊசiஅiயேட சூநபடபைநnஉந) என்கிற முறையில் பாதிப்புகளுக்கும், சேதாரங்களுக்கும், உயிரிழப்புகளுக்கு பொறுப்பாக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் ஒற்றை மனிதரின் முடிவே இறுதியானது என்கிற நிலைமை அரசியல் அதிகாரத்தில் இருப்போரிடம் மட்டுமின்றி, அதிகார அமைப்புக்குள் பரவியிருப்பது வெளிப்பட்டிருக்கிறது. இதற்கு ஆளும் அஇஅதிமுக கட்சியும், அதன் தலைவர் என்கிற முறையில் முதலமைச்சருமே முழுப்பொறுப்பேற்க வேண்டியவர்கள்.

எனவே, தமிழக அரசு இந்தக் குறிப்பிட்ட பிரச்சனையில் பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீர்மேலாண்மை வல்லுநர்களையும் கொண்ட விசாரணைக் கமிஷன் அமைத்து உரிய குற்றவாளிகளை கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்குவதோடு எதிர்காலத்தில் இத்தகைய நிலை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

-http://www.nakkheeran.in

TAGS: