டெல்லியில் காற்று மாசுபாடு…டீசல் கார்களுக்கு முற்றிலும் தடை?

traffic-signalடெல்லி: டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாட்டை குறைக்கும் விதமாக டீசல் கார்களுக்கு தடை விதிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

நாளுக்கு நாள் பெருகிவரும் வாகனப் பயன்பாட்டால் டெல்லி நகரமே மாசுபட்டு கிடக்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் நிலையில் தலைநகர் டெல்லி உள்ளது.

இந்நிலையில் மாசு அளவை குறைக்க டீசல் கார், லாரி, டிரக் ஆகியவற்றின் போக்குவரத்திற்கு தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு டெல்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், டெல்லியில் மாசு மிகவும் தீவிரவான பிரச்சினையாக உள்ளது.

இதுகுறித்து டெல்லி அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி மாநகராட்சி மற்றும் பலருடன் இணைந்து, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைகளை உருவாக்க வேண்டும். மேலும் செவ்வாய்கிழமை டீசல் கார்களுக்கு தடை விதிப்பதா அல்லது போக்குவரத்தை கட்டுப்படுத்துவதா என்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

மேலும் இது மிக முக்கியமான பிரச்சினை. உலகின் மிகவும் மாசுப்பட்ட நகரம் என்ற கெட்ட பெயரை டெல்லி ஏற்படுத்தி விட்டது என டி.எஸ். தாக்கூர் கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: