மழை-வெள்ள பாதிப்பு: தமிழகம் முழுவதும் 347 பேர் மரணம்; இதுவரை 1.11 லட்சம் குடும்பங்களுக்கு நிதி

cchennaiவடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை பல்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டு 347 பேர் இறந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பருவமழை கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கியது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்தது. இதனால், அந்த மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. சென்னையிலும், புறநகர்ப் பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளில் ஒரு ஆள் உயரத்துக்கு வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், 600-க்கும் மேற்பட்ட படகுகள் மூலமாக பொது மக்கள் மீட்கப்பட்டனர்.

17.64 லட்சம் பேர் மீட்பு:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை-வெள்ளம் பாதித்த இடங்களில் சிக்கியிருந்த 17 லட்சத்து 64 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். பலர் அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இதற்காக வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் அமைக்கப்பட்ட மொத்த நிவாரண முகாம்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 605 ஆகும். முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்காகவும், மாடிகளில் சிக்கிக் கொண்டவர்களுக்கும் சேர்த்து இதுவரை ஒரு கோடியே 28 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்த மீட்பு நிவாரணப் பணிகளில், தமிழக காவலர்கள், தீயணைப்பு வீரர்களுடன் ஆயிரத்து 200 ராணுவ வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 48 குழுக்களும், 400 கடற்படை-கடலோர காவல் படையினரும், 7 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன.

இழப்பும்-நிவாரண நிதியும்…:

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்தே வெள்ளம் அடித்துச் செல்லப்பட்டது, மின்சாரம் தாக்கியது, சுவர் இடிந்து விழுந்தது எனப் பல்வேறு சம்பவங்களின் மூலமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதுவரை மாநிலம் முழுவதும் 347 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும், குடிசைகள், கால்நடைகளை இழந்தோருக்கும் உரிய இழப்பீடுகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில், இதுவரை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 278 பேரின் குடும்பங்களுக்கு ரூ.67.47 கோடி நிவாரண நிதியாக அளிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நிவாரண நிதிகள் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்காக இதுவரை 590 மெட்ரிக் டன் ஆவின் பால்பவுடர் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அந்தத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பாடப் புத்தகங்கள், சீருடைகள், குடும்ப அட்டைகள் ஆகியவற்றை திரும்ப வழங்குவதற்கு தமிழக அரசுத் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இதுவரை 99 ஆயிரத்து 631 மாணவ-மாணவியருக்கு இலவசமாக பாடப் புத்தகங்களும், 29 ஆயிரத்து 234 சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளன.

குடும்ப அட்டைகளை இழந்தவர்களில் இதுவரை 3 ஆயிரத்து 837 பேருக்கு, நகல் அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை புறநகர்-கடலூரில் பாதிப்பு நீங்கவில்லை: மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை புறநகர், கடலூரின் பல கிராமங்களில் இன்னும் வெள்ள நீர் வடியவில்லை. சென்னை முடிச்சூர், காட்டுப்பாக்கம், வளசரவாக்கம், திருவான்மியூர் எனப் பல முக்கியப் பகுதிகளில் உள்ள தெருக்களில் வெள்ள நீர் வடியாத சூழலே இருக்கிறது.

இதனிடையே, அடுத்த 2 நாள்களுக்கு தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது, பாதிப்புக்கு உள்ளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரிய அளவுக்கு இயல்பு நிலை திரும்புவதற்கு வழி ஏற்பட்டுள்ளதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

-http://www.dinamani.com

TAGS: