சென்னை சராசரி வாழ்க்கைக்கு திரும்புவதாக எழுத ஆரம்பித்திருப்பது ஆபத்தின் அறிகுறி!

chennai-rainகிட்டதட்ட அனைத்து ஆங்கிலப்பத்திரிக்கைகளும் சென்னை சராசரி வாழ்க்கைக்கு திரும்புவதாக எழுத ஆரம்பித்திருப்பது ஆபத்தின் அறிகுறி.

அரசு நிர்வாகத்தின் சீர்கேடு குறித்தும், நிவாரணப்பணிகள் சீரமைக்கப்படாமலும், ஒருங்கிணைக்கப்படாமலும் மரணித்திருக்கும் அரசினை கேள்விக்குள்ளாக்கும் எந்த செய்தியையும் நாம் காணமுடிவதில்லை.

ஜெயலலிதா படத்தினை ஒட்டி நிவாரணப்பொருட்களை அதிமுகவினர் சொந்தம் கொண்டாடும் அராஜகத்தினை நாம் வளைதளங்களில் எழுதியும் எதிர்ப்பும் தெரிவித்த பின்னரே செய்தியானது. அது மட்டுமே இன்றுவரை செய்தியாகி இருக்கிறது.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் நிர்வாக சீர்கேடுகள், இன்றுவரை செயல்படாமல் முடங்கிப் போய் இருக்கும் திட்டமிடல் உள்ளிட்ட நிர்வாக மேலான்மை என பலவிடயங்களை செய்திகளில் காணமுடிவதில்லை. மாறாகஜெயலலிதா அறிவித்திருக்கும் நிவாரண உதவிகளை செய்திகளாக வெளியிடப்பட்டிருக்கிறது.

தேசிய இதழ்களாக வெளியாகும் இந்த ஆங்கில இதழ்களின் சென்னை பதிப்பிலேயே சென்னையின் பேரிழப்புகள் பேசப்படவில்லை. மேம்போக்காக நடக்கும் தொண்டுநிறுவனப் பாணி வேலைகளை மட்டுமே செய்தியாக்கி க்டந்து செல்லும் அயோக்கியத்தனத்தினை அனைவரும் கேள்வி கேட்கும் நேரம் இது.

சென்னை சராசரி வாழ்க்கைக்கு திரும்பவில்லை. தற்பொழுதுதான் சேதத்தின் அளவீட்டினை கண்டறிந்து அதிர்ச்சியில் நனைகிறது. வீட்டிற்கு திரும்ப முடிந்த ஒவ்வொருவரும் கண்ணீரில் நனைவதை களத்தில் வேலை செய்யும் பல தோழர்களாகிய நாம் அறிவோம். இதை மறைத்து மேலோட்டமாக செய்தியை வெளியிட்டு அடுத்த கட்ட செய்திக்குள் நகரும் தேசிய நாளிதழ்களுக்கு எதிர்ப்பினை பதிவு செய்யுங்கள்.

’தி இந்து’ பத்மாசுப்ரமணியத்தின் துயரத்தினை எழுதுகிறது, சங்கீத சபாக்கள் வெளியிட்ட அறிக்கையினை வெளியிடுகிறது, சினிமா நடிகர்களின் செய்திகளை பிரதானபப்டுத்துகிறது, கார்ப்பரேட் நிறுவனங்கள் அறிவித்துள்ள நிவாரண உதவிகளை அரைபக்க செய்திகளாக்குகிறது. ஆனால் சராசரி பாதிக்கபப்ட்ட மக்களை குற்றவாளிகளாக மாற்றுகிறார்கள். கடலூரில் பொருட்களை மக்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்கிறார்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் கொள்ளையடிக்கும் பணத்தினை கேட்கிறார்கள் என்கிறார்கள். ஆனால் மொபைல் நெட்வொர்ர்கை மூடிவிட்டு ஓடிவிட்ட தனியார் நிறுவனம் குறித்து எழுதுவதில்லை, நோயாளிகளை கொலை செய்துவிட்டு ஓடிய தனியார் மருத்துவமனைகளை எழுதுவதில்லை, கால்டேக்சிகள் கைவிட்டதைப் பற்றி எழுதுவதில்லை. ஆட்டோக்களை பேசும் இப்பத்திரிக்கை ஆயில் விலை அதிகரித்ததையும், வரிசையில் காலக்டுக்க நின்று ஆட்டோ ஓட்டுனர்கள் வாகனத்தினை நிரப்பியதையும், கையிலிருந்த மொத்த பணத்தினை கொண்டு வாகனத்தினை சரிசெய்ததையும், பெரும்பாலோனோரின் வீடுகளில் தண்ணீர் இருந்த பொழுதில் ஆட்டோ ஓட்டி சேவை செய்வதைப் பற்றி எழுதுவதில்லை.

தொடர்ந்து சென்னை விமான நிலையத்தின் சேவை பற்றிய செய்திகளை மட்டும் முன்னணி செய்திக்கு நகர்த்த முடிந்தவர்களுக்கு பிற போக்குவரத்து செய்திகளைப்பற்றிய அதிக தேவைப்படும் தகவல்களை அரிதாக்வே காண முடிந்தது,.

கொள்ளையடிக்கும் ஆட்டோக்கள், பால்வணிகர்கள் என எழுதும் 400 கோடி லாபம் பார்க்கும் தி இந்து இலவசமாக இரண்டு நாட்கள் நாளிதழ்களை நம்மிடம் கொடுக்கவில்லை என்பதையும் நாம் மறக்கவில்லை. இந்த லட்சனத்தில் தி இந்துவின் பன்னீர் செல்வத்தின் அரைவேக்காட்டு கட்டுரையை வேறு படிக்க வேண்டியதாயிற்று. எமோசனல் ஜர்னலிசம், அப்ஜெக்டிவ் ஜர்னலிசம் என்று வாந்தி எடுத்து வைத்துள்ளார். பத்மாசுப்ரமணியம், மியூசிக் அகடமி வகை எமோசனல் ஜர்னலிசம், நெஸ்லே-யுனிலீவர்-சிடிஎஸ்சின் கார்ப்பரேட் தொண்டு வகை அப்ஜக்டெவ் ஜர்னலிசத்தினை சொன்னாரோ என்னவோ. பணக்கார வர்க்கமாகவும், அதிகார வர்க்கத்தின் ஊதுகுழலாகவும் மாறிப்போன தி இந்துவும் அதில் பணியாற்றும் பன்னீர் செல்வம் போன்றவர்கள் சென்னையின் சிவில் சமூகமாக இருக்கும் பொழுது சென்னை வெள்ளத்தில் மூழ்குவதை யாராலும் தடுக்கமுடியாமல் போகும் துயரம் ஏற்படவே செய்யும்.

மேம்போக்கு செய்தி வெளியிடுதலும், சென்னை இயல்பாகிறது என்பதுவும் அதிமுக-ஜெயலலிதா-இந்திய-மோடி அரசின் தோல்வியை மறைக்கும் செயல்.

இது நடுத்தர-அடிமட்ட மக்களின் கோரிக்கைகள் சென்றடையாமல் முடக்கும் செயலுக்கே இட்டுச் செல்லும்.

சென்னை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. தன்னை மீட்டெடுக்கும் போராட்டத்தினை துவக்கி இருக்கிறது.

Thirumurugan Gandhi

Thirumurugan Gandhi's photo.
TAGS: