சென்னை: மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது எக்கேடாவது கெட்டு போங்கன்னு செம்பரம்பாக்கம் ஏரியை எப்படி திறந்துவிடலாம்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் வெள்ளம் பாதித்த பல பகுதிகளை நேரில் பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை சீமான் வழங்கி வருகிறார். அண்ணா நகர், மதுரவாயல், பீர்க்கன்கரணை பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று நேரில் சென்று சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார் சீமான். அப்போது செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: ஏரிக்கரை மற்றும் ஆறுகளின் ஓரங்களில் உள்ள வீடுகள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆறுகள் அளவு சுருங்கியதுதான். இதையெல்லாம் தாண்டி அரசின் அலட்சியத்தால் ஏற்பட்டதுதான் இவ்வளவு பேரிழப்பு.
மக்களுக்கு முன்கூட்டியே நீரை திறந்து விடுவது பற்றிய முன்னறிவிப்பைச் செய்திருந்தால் மக்கள் தங்களுக்கான அத்தியாவசிய பொருளான குடும்ப அட்டை, சான்றிதழ் போன்றவற்றைப் பாதுகாத்து இருப்பார்கள். ஒரு ஏரி இருக்கிறது என்றால் அந்த ஏரிக்கு என்று ஒரு கண்காணிப்பு அதிகாரி இருக்கிறாரா இல்லையா? ஏரி இவ்வளவு நேரத்தில் நிரம்பும் என்ற கணக்கு இருக்கணுமா இல்லையா? அந்த அளவை பார்த்து முன்னறிவிப்புச் செய்து எந்த இடத்தில் நீர் வருமோ அங்குத் தீயணைப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினரை அனுப்பி மக்களைப் பாதுகாத்துவிட்டு பிறகு நீரை திறந்துவிட்டு இருக்கணும். அதை விட்டு விட்டு நள்ளிரவு மக்கள் உறக்கத்தில் இருக்கும்போது எக்கேடாவதுகெட்டு போங்க எனத் திறந்து விட்டால் அது எவ்வளவு கவனக்குறைவான வேலை.
நான் பார்த்த வரை வீடுகளில் முழங்கால் வரை சேறும் சகதியுமாக இருக்கிறது. இதை மக்களே எப்படிச் சுத்தப்படுத்த முடியும். இதுவரை நான் பார்த்த மக்கள் அனைவருமே எதிர்பார்ப்பது மாற்று உடை, தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ளப் பாத்திரம், விரித்துப் படுக்கப் பாய் போன்ற அத்தியாவசிய பொருட்களைதான்…. எங்களால் முடிந்த அளவுக்கு எங்கள் மக்களுக்கு உதவிகளைச் செய்துகொண்டு வருகிறோம்.
மக்கள் வருத்தபடுவதெல்லாம் தங்களைப் பார்க்க யாருமே வரவில்லையே என்றுதான். யாருமே என்றால் அதிகாரத்தில் இருக்கும் பெரிய தலைவர்கள், மாமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் இவர்கள்தான். இவர்கள் அனைவரும் வாக்கு கேட்டு வந்தார்கள் ஆனால் நாம் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கும்போது ஒருவருமே வரவில்லையே என மக்கள் மிகுந்த மனவேதனை அடைகிறார்கள்.
பிழைக்க வந்த மக்கள் தங்களின் மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கிறார்கள். இப்போது மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆனால் மக்கள் கேட்பது இந்தச் சகதியை அள்ளி சுத்தம் செய்துகொடுத்தால் போதும் நாங்கள் எப்பாடுபட்டாவது வேலை செய்து பிழைத்துகொள்கிறோம். இதைமட்டும் நிறைவேற்றிக் கொடுங்கள் என்றுதான் கேட்கிறார்கள்.இந்த அரசாங்கம் நிவாரணத் தொகையாக வெறும் 1000 கோடியைதான் ஒதுக்கி உள்ளார்கள். இதைவைத்து என்ன செய்யமுடியும். இங்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்யவேண்டும் என்றால் குறைந்தது இலட்சம் கோடியாவது தேவை. எனவே மத்திய, மாநில அரசுகள் இவருக்குப் பேர் போய்விடுமோ, அவருக்குப் பேர் போய்விடுமோ என்று ஒதுங்கி இருந்து இழிவான அரசியலை செய்யாமல் மக்களுக்குச் சேவை செய்யவேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.