அதிரடியாக ஆக்கிரமிப்புக்களை அகற்றும் பெண் அதிகாரி: குவியும் பாராட்டு

amudha_ias_001சென்னை அருகே காஞ்சிபுரத்தில் இருந்த ஆக்கிரமிப்புக்களை பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா என்பவர் எதிர்ப்புக்களையும் மீறி அகற்றி வருவது மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகள் ஒரு வார மழைக்கே வெள்ளக்காடாக மாறியது.

மேலும், இரவு நேரத்தில் ஏரிகளின் நீரை எந்த அறிவிப்பும் இல்லாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்துவிட்டதால் பலரும் தங்கள் வீடு, உடைமைகளை இழந்து தவித்தனர்.

மழை நின்று பல நாட்களாகியும் இன்னும் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியவில்லை.

இதற்கு முக்கிய காரணம் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நிறைந்திருக்கும் ஆக்கிரமிப்புகள்தான்.

ஏரிகளில் இருந்து ஆற்றுக்கு நீரை கொண்டு செல்லும் கால்வாய்களையும், ஆறு, ஏரி, குளங்கள் என அனைத்துமே ஆக்கிரமிக்கப்பட்டதற்கான விளைவு தான் இது.

இந்நிலையில் தற்போது அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் அகற்றி நீர்நிலைகள் மற்றும் வடிகால்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர் ராஜாராமன் தலைமையில் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அதில் வெள்ள பாதிப்புக்கான சிறப்பு அதிகாரியாக இடம்பெற்றிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா வெள்ளம் குறையத் தொடங்கியதும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

முதற்கட்டமாக தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அம்பேத்கர் புதுநகரில் 150க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளிலும் அடையாறுக்கு செல்லும் நீர் வழி ஆக்கிரமிப்புகள், மணிமங்கலம் பகுதியிலும் உபரி நீர் வழிந்தோடும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் என பல்வேறு ஆக்கிரமிப்புகளை அரசியல்வாதிகளின் எதிப்புகளையும் மீறி துணிச்சலுடன் அகற்றி வருகிறார்.

அமுதா கூறுகையில், வெள்ள பாதிப்புக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளேன்.

முதலில் மீட்பு பணியை மேற்கொண்டோம். அதன் பின்னர் நிவாரணப் பணியை செய்தோம்.

அடுத்த கட்டமாக மீண்டும் வெள்ளம் வந்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்களில் இருந்து ஆற்றுக்கு செல்லும் வழிகளை சீரமைத்து வருகிறோம்.

அதிகமான வடிகால்களில் ஆக்கிரமிப்புகள் மூலமாகவே தண்ணீர் தேங்கியிருக்கிறது.

ஆக்கிரமிப்பு பகுதிகள் பெரும்பாலும் வியாபார நிறுவனங்களாகவும், கடைகளாகவும் இருந்தன.

மக்கள் தங்களுடைய நீர் நிலைகளில் ஏற்படும் ஆக்கிரமிப்பை அகற்ற ஆரம்ப கட்டத்திலேயே போராட வேண்டும்.

அப்போதுதான் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் பயம் வரும். அதிகாரம் செய்யும் அரசியல் கட்சியினரை பார்த்து பயப்படக் கூடாது.

ஆற்றுக்கு தண்ணீரை கொண்டு செல்லும் கால்வாய்களை எல்லாம் அடைத்து விட்டால் தண்ணீர் குடியிருப்புக்குள்தான் வரும்.

இனியாவது மக்களும் தங்களுடைய நீர் நிலையை பாதுகாக்க முன் வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஒரு வாரமாக தேங்கி இருந்த வெள்ளநீர், ஆக்கிரமிப்புகளை அகற்றிய அடுத்த சில மணி நேரங்களில் வடிந்ததை பார்த்த பொதுமக்கள், அமுதாவை பாராட்டி வருகின்றனர்.

-http://www.newindianews.com

TAGS: