கோடிக்கணக்கான ஏழை மக்களை கொண்டுள்ள இந்தியா போன்ற நாட்டிற்கு ரூ.1 லட்சம் கோடியில் புல்லட் ரயில் திட்டம் தேவையா!

laluபாட்னா: கோடிக்கணக்கான ஏழை மக்களை கொண்டுள்ள இந்தியா போன்ற நாட்டிற்கு ரூ.1 லட்சம் கோடியில் புல்லட் ரயில் திட்டம் தேவையா என ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். பீகார் மாநில ஆர்ஜேடி கட்சி தலைவர் லாலு பிரசாத் பிரதமர் மோடிக்கு பகிரங்கமாக எழுதியுள்ள 2 பக்க கடிதம் ஒன்றில், ஏராளமான ஏழை மக்களை கொண்ட இந்தியாவுக்கு சுமார் ரூ.1 லட்சம் கோடியில் புல்லட் ரயில் திட்டம் தேவையா? இதை பிரதமர் மோடி வெளிப்படையாக விளக்க வேண்டும். இந்த திட்டத்தால் இந்தியாவில் உள்ள எத்தனை மக்கள் பயன் பெறப் போகிறார்கள்? லட்சக்கணக்கான மக்கள் அன்றாடம் வயிற்றுப்பாட்டிற்காக அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர். முறையான ஊட்டச்சத்து கிடைக்காமல் நோய்வாய்ப்பட்டு இறந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சிறிய அளவில் மட்டுமே மக்கள் பயன்படும் வகையில் இந்த திட்டம் இந்தியாவுக்கு தேவைதானா? விவசாயிகளுக்கும், ஏழை தொழிலாளர்களுக்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு இது போன்ற வீணாண திட்டங்களில் நிதியை செலவழித்து வருகிறது. நாட்டின் முக்கியமான துறைகளான வேளாண்மை, சுகாதாரம், கல்வி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஒரு சிறிய தூரத்திற்காக இவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டு உருவாக்கப்படும் இந்த புல்லட் ரயில் திட்டத்தால் சில நூறு பேர் கூட பயன்பெறப் போவதில்லை. வளர்ந்த, பணக்கார நாடுகளே புல்லட் ரயில் திட்டம் வேண்டாம் என்று கருதிக் கொண்டிருக்கும் கால கட்டத்தில், போட்டிக்காக மிகவும் குறைவான கட்டணத்தில் விமானங்களை இயக்கி வரும் வேளையில், இந்தியா போன்ற ஏழைகள் உள்ள நாட்டிற்கு இது தேவை தானா?

புல்லட் ரயிலுக்கு செலவழிக்கும் நிதியை கொண்டு ஒட்டு மொத்த ரயில் போக்குவரத்துக்கான உள்கட்டுமானத்தையும் மேம்படுத்தினாலே மிகப் பெரிய அளவில் வருவாயை ஈட்டி விட முடியும் என்று அதில் விமர்சித்துள்ளார். இந்தியாவில் மும்பை-அகமதாபாத் இடையில் 505 கிமீ தொலைவுக்கு முதல் புல்லட் ரயில் திட்டம் ரூ.98 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக அண்மையில் இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் பிரதமர் மோடி ஒப்பந்தங்களை நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.dinakaran.com

TAGS: