மோடி அதிரடி.. ஆப்கானிலிருந்து திரும்பும் வழியில் பாக். சென்றார்- லாகூரில் ஷெரீப்புடன் சந்திப்பு!!

modi-nawazடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி திடீரென இன்று பாகிஸ்தான் சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா, ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பும் வழியில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க பாகிஸ்தான் சென்றுள்ளார் பிரதமர் மோடி.

எல்லையில் மோதல்கள் நிகழ்ந்த நிலையிலும் பிரதமராக மோடி பதவியேற்ற போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சார்க் அமைப்புகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். பாகிஸ்தான் பிரதமர், இலங்கை அதிபர் ஆகியோரை அழைத்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பின்னர் இருநாட்டு பேச்சுவார்த்தையை திடீரென ரத்து செய்தது மோடி தலைமையிலான அரசு. வெளிநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நேருக்கு நேர் பார்ப்பதைக் கூட தவிர்த்து வந்தார் பிரதமர் மோடி.

ஆனால் சமீப காலமாக பாகிஸ்தானுடனான இந்த இறுக்கம் தளர்ந்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பிரதமர் மோடி திடீரென நல்லுறவை கடைபிடித்து வருகிறார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வானிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. மாநாட்டில் நவாஸ் ஷெரீப்பை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அண்மையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூம் கூட பாகிஸ்தான் சென்று திரும்பினார்.

இன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பிறந்த நாளையொட்டி முதலில் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி. ஆப்கானிஸ்தானில் பயணம் மேற்கொண்ட நிலையில் நவாஸ் ஷெரீப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில் தாம் ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி திரும்பும் வழியில் லாகூரில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்கப் போவதாக பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்திருந்தது பெரும் புயலை கிளப்பியது.

இதன்படியே ஆப்கானிஸ்தானில் இருந்து நாடு திரும்பும் வழியில் பாகிஸ்தானை சென்றடைந்தார் பிரதமர் மோடி. பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பாகிஸ்தான் சென்றுள்ளார்.

இந்தியாவின் பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தானுக்கு இப்படி திடு திடுப்பென எந்த ஒரு முன்னறிவிப்பு, திட்டமிடல் இல்லாமல் நாட்டுக்கு திரும்பும் வழியில் “ஒரு எட்டு போய்ட்டு வருகிறேன்” என பிரதமர் மோடி சர்வ சாதரணமாக சென்றிருப்பது மிகப் பெரும் அதிரடியாக அதே நேரத்தில் பிரளயத்தைக் கிளப்பும் என்றே கூறப்படுகிறது.

tamil.oneindia.com

TAGS: