2015-ல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி அபாரம்

சர்வதேசப் பொருளாதாரம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தாலும், இந்த ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி வெகு சிறப்பாக இருந்தது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

 2015-ஆம் ஆண்டைத் திரும்பிப் பார்க்கும்போது சர்வதேச அளவில் பொருளாதாரத் தேக்கநிலை ஏற்பட்டது. ஆனால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி சிறப்பாகவே இருந்தது. பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 முதல் 7.5 சதவீதமாக உள்ளது. நமது பொருளாதார வளர்ச்சி இலக்கு 8 சதவீதம் என்ற நிலையில் இது சிறப்பானதொரு வளர்ச்சிதான். எனவே வரும் மாதங்களில் இது இன்னும் மேம்படும். சர்வதேச சவால்களை எதிர்கொண்டு இந்தியப் பொருளாதாரம் எழுச்சியடைந்துள்ளது. எனினும் இந்தியாவில் ஒரு சில துறைகளில் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டியுள்ளது. பருவமழை பொய்ப்பது, தனியார் துறையில் முதலீட்டில் ஏற்பட்டுள்ள சுணக்கம் ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்கின்றன.

புத்தாண்டிலும் அடிப்படை பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடர்வோம். சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை நிறைவேற்ற முக்கியத்துவம் கொடுக்கப்படும். நேரடி வரி விதிப்பு முறை மேம்படுத்தப்படும். தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்படும். பொருளாதாரம் வளர்ச்சியடையாமல் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்காது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதை அடுத்து அதனால் கிடைக்கும் பலன்கள் முழுமையாக வளர்ச்சிக்காக திருப்பிவிடப்பட்டுள்ளன. பணவீக்கம் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. சர்வதேச அளவில் பிறநாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் அன்னியச் செலாவணி மூலம் கிடைக்கும் வருவாய் சிறப்பாக உள்ளது. எனினும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலை இந்தியாவின் ஏற்றுமதியிலும், இறக்குமதியிலும் எதிரொலித்துள்ளது.

இந்தியா வளர்ச்சியை நோக்கி முன்னேறி வரும் இந்த சூழ்நிலையில், அதற்குத் தடையை ஏற்படுத்துவதுபோல எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கின. இதனால், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல்போனது. இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இது ஒரு மோசமான செயல். முக்கிய மசோதாக்களை காங்கிரஸ் தொடர்ந்து நிறைவேற்றவிடாமல் செய்தால், அதற்கு மாற்று வழி என்ன என்பதை நாடாளுமன்றம் யோசிக்க வேண்டும். அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் ஒரு மசோதாவை நிறைவேற்றுவது என்பது சிறப்பான நடவடிக்கையாக இருக்காது என்றார் அருண் ஜேட்லி.

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் பார்ஸி இனத்தவரின் நிகழ்ச்சியில் அவர், ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார். அப்போது பார்ஸி சமூகத்தில் இருந்து இன்னும் ஏராளமான தொழிலதிபர்கள் உருவாக வேண்டுமென்று அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் ரத்தன் டாடா கெüரவிக்கப்பட்டார்.

-http://www.dinamani.com

TAGS: