“இந்தியாவும் அமெரிக்காவும் சர்வதேசப் பொருளாதார சக்திகள்’

america-india-flag-001இந்தியாவும், அமெரிக்காவும் சர்வதேசப் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும் முக்கியச் சக்திகளாகத் திகழ்கின்றன என்று உலக வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கெüசிக் பாசு தெரிவித்தார்.

 இந்தியப் பொருளாதாரச் சங்கத்தின் (ஐஇஏ) 98-ஆவது ஆண்டு விழா ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கெüசிக் பாசு பேசியதாவது:
சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை காணப்படுகிறது. உலக நாடுகளின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி வெறும் 2.5 சதவீதமாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில் பொருளாதாரம் குறித்த இத்தகைய கருத்தரங்குகளை நடத்துவது மிகவும் முக்கியமானது.

ரஷியாவின் பொருளாதார நிலை சரிந்து வருகிறது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதமானது 4 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல் பிரேசில் நாட்டின் ஜிடிபி-யும் 3.5 சதவீதம் குறைந்துள்ளது.

“பிரிக்ஸ்’ அமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளில் இந்தியாவும், சீனாவும் மட்டுமே பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றன. அதிலும் இந்தியா அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாக உயர்ந்து வருகிறது. அதேவேளையில் சர்வதேச வர்த்தகம் மந்தமாக இருப்பது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அரசியல் பிரச்னைகள் மற்றும் அங்கு மிகப்பெரிய அளவில் உருவெடுத்துள்ள அகதிகள் விவகாரங்கள் ஆகியவையும் நம் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.

இதுபோன்ற சிக்கலான சூழ்நிலைகளில் சில ஆய்வுகளை நடத்தி, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைளை முன்னெடுப்பது அவசியம் என்றார் அவர்.

-http://www.dinamani.com

TAGS: