ஜல்லிக்கட்டு குறித்து மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

jalliபுதுடெல்லி, டிச. 30- ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கி இந்த ஆண்டு மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. முதலமைச்சர் ஜெயலலிதாவும் இதுபற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக புத்தாண்டில் நல்ல செய்தி வரும் என மத்திய மந்திரியும் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று கூடியது. கூட்டத்தில் உயர் கல்வித்துறை குறித்த கனடா நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டுக்காக ப்ளூம் பெர்க் நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கும் மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்து உள்ளது.

வரி ஏய்ப்பு மற்றும் வரிகட்டாமல் தவிர்ப்பதை தடுக்கும் வகையில் தகவல்களை பரிமாறிக்கொள்ள வகை செய்யும் இந்தியா-மாலத்தீவு ஒப்பந்தத்திற்கும் மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

இந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்குவது பற்றி முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் அவ்வாறு முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

கூட்டம் முடிந்து வெளியே வந்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஜல்லிக்கட்டு தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.

பொங்கலுக்கு இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில், மத்திய அரசு விரைவில் நல்ல முடிவு எடுத்து அறிவிக்கும் என நம்புவோம்.

-http://www.maalaimalar.com

TAGS: