மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் மறைவுக்கு வீரவணக்கம்: பெ. மணியரசன்

thamil_annal_001மூத்த தமிழறிஞரும், தமிழாய்வுலகில் தனக்கெனத் தனித்த இடத்தைப் பெற்றவருமான முனைவர் இராம. பெரியகருப்பன் (தமிழண்ணல்) அவர்களின் மறைவுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் பெ.மணியரசன் வீரவணக்கத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் அவர்கள் 29.12.2015 அன்று இரவு மதுரையில் அவரது இல்லத்தில் காலமான செய்தி வேதனைக்குரியது. ஒட்டு மொத்தத் தமிழர்களுக்கும் இது ஒரு துன்பச் செய்தி.

மதுரைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவராக இருந்து பணி ஓய்வு பெற்ற தமிழண்ணல் அவர்கள், பல்வேறு விருதுகள் பெற்றவர்.

தமிழ் ஆய்வில் ஏராளமான நூல்கள் எழுதியவர். தொல்காப்பியம் குறித்த அவரது ஆய்வுரை சிறப்புமிக்கது.

ஓய்வு பெற்ற தொல்லியல் அறிஞர் நாகசாமி அவர்கள் தமிழ்மொழியை கீழ்மைப்படுத்தும் நோக்கத்தோடு, சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களும், சமற்கிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை என்று ஆராய்ச்சி என்ற பெயரில் ஓர் அவதூறு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார்.

அதற்குத் தக்க சான்றுகளுடன் ஒவ்வொன்றையும் மறுத்து ஆழமான ஆய்வு நூலை அய்யா தமிழண்ணல் அவர்கள் எழுதி தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டார்.

பல்வேறு தமிழ் அமைப்புகளின் – தமிழ்த் தேசிய இயக்கங்களின் – தமிழறிஞர்களின் பொது அமைப்பாக விளங்கிய தமிழ்ச் சான்றோர் பேரவை, தமிழ்வழிக் கல்வியை சட்டமாக்கிட வலியுறுத்தி சாகும் வரையில் நூறு தமிழறிஞர்கள் மற்றும் தமிழுணர்வாளர்கள் சென்னையில் உண்ணாப் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்த போது, ஓர் இக்கட்டான நிலையில் அப்போராட்டத்திற்கு தலைமை தாங்க மன உறுதியோடு தமிழண்ணல் முன்வந்தார்; தலைமை தாங்கினார்.

ஒரு தமிழறிஞராய் – தமிழ் மொழிக்கு எதிரான கருத்துகளை முறியடிக்கும் ஆராய்ச்சிப் போராளியாய் – ஆட்சித்துறையிலும் கல்வித்துறையிலும் தமிழை அரங்கேற்றுவதற்கானக் களப் போராளியாய் செயல்பட்ட தமிழண்ணல் அவர்களின் மறைவுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: