டெல்லி: ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் சேர்ந்துள்ளதாக மத்திய உளவுத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.தீவிரவாத குழுக்கள் சிரியா, ஈராக் நாடுகளின் ஒரு பகுதியை ஒருங்கிணைத்து புதிய நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உலகிற்கு பெரும் அச்சுருத்தலாக விளங்கும் ஐ.எஸ். தீவிரவாதத்தை அளிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க, ரஷ்யா, நாடுகளின் கூட்டுப் படைகள் தீவிர சண்டையிட்டு வருகின்றன. இந்த சண்டை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்த நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களை பலப்படுத்தி கொள்வதற்காக மற்ற நாடுகளில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை மூளைச் சலவை செய்து தங்களது இயக்கத்தில் சேர்த்து வருகிறார்கள்.
இதற்காக ஐ.எஸ். தீவிரவாதிகள் இணையத்தளங்களில் தங்களை நல்லவர்கள் போல காட்டும் மத உணர்வைத் தூண்டும் காட்சிகளை வெளியிட்டும் வருகிறார்கள். அந்த இணையதள தகவல்களை நம்பி ஏமாந்து உணர்ச்சி வசப்படும் இளைஞர்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் போய் சேருகிறார்கள். அந்த வகையில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த 23 பேர் அப்படி இணையத்தள தகவல்களை பார்த்து நம்பி ஏமாந்து போய் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இந்த 23 பேர் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளாக மாறிய 23 இந்தியர்களில் 6 பேர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மற்ற 17 பேரும் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இவர்களில் முகம்மது தாயீப் ஷேக் (வேலூர்), அபுதாகீர் (கரூர்), சாகுல் அமீது (சென்னை) ஆகிய 3 பேருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆயுதப் பயிற்சி கொடுத்து அவர்களை “பலிகடா” ஆக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மேலும் பல தமிழ்நாட்டு இளைஞர்களை ஏமாற்றி சிரியாவுக்கு இழுக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் தீவிரமாக இணைய தளங்களில் தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். அதோடு தற்கொலை படைக்கு ஆள்பிடிக்க ஏஜெண்டுகளையும் களத்தில் இறக்கியுள்ளனர். அத்தகைய ஏஜெண்டுகளிடம் ஏமாந்த இளைஞர்கள் பற்றிய தகவல்கள் மத்திய உளவு துறைக்கு தெரிய வந்தது.
உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு பலரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற இந்திய இளைஞர்களின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தப்பட்டன. அந்த வகையில் சமீபத்தில் சூடானில் தமிழக வாலிபர் ஒருவர் கைது செய்து திருப்பி அனுப்பப்பட்டார். ஏஜெண்டுகள் பயன்படுத்திய லேப்டாப் மூலம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் மீது அனுதாபிகளாக மாறிய சில இளைஞர்கள் பற்றி தெரியவந்துள்ளது. அவர்களை உளவுத்துறை ரகசியமாக கண்காணித்து வருகிறது.

























