நீதிமன்றம் விதித்த ஆலய ஆடைக்கட்டுப்பாடு அவசியமா? அதிகார மீறலா?

temple_dress

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆடைக்கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்கள் அணிய வேண்டிய உடைகளுக்கு கட்டுப்பாடு விதித்து நீதிபதி தீர்ப்பளித்திருப்பதும் அதனை தமிழக கோவில்கள் அமுல்படுத்துவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, திருச்சியில் உள்ள கிராமம் ஒன்றில் திருவிழாவை ஒட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் பாரம்பரிய வழக்கப்படி உடையணிந்து செல்ல வேண்டுமென்றும் ஆண்கள் வேட்டி, சட்டை அல்லது பைஜாமா; பெண்களுக்கு புடவை, தாவணி, துப்பட்டா உள்ள சுடிதார் ஆகியவற்றை அணிந்துவர வேண்டுமென கூறினார்.

இதையடுத்து தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு இந்த சமய அறநிலையத் துறையின் சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. உடைக்கட்டுப்பாடு தொடர்பான அறிவுறுத்தலை கோவில் வளாகங்களில் வைக்க வேண்டுமென அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட கோவில்களில் இது தொடர்பான அறிவிப்புப் பலகையைப் பார்க்க முடிந்தது.

இந்த உடைக்கட்டுப்பாடு குறித்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்தக் கட்டுப்பாட்டுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிக் கோவில்

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிக் கோவில்

திருவல்லிக்கேணி கோவிலின் நிர்வாக அதிகாரி கோதண்டராமனிடம் இது குறித்துக் கேட்டபோது, அவர் அதிகாரபூர்வமாக கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இருந்தபோதும், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் சுற்றறிக்கையின்படியே செயல்படுவதாகவும் பொதுவாக பக்தர்கள் நல்ல முறையிலேயே உடையணிந்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கட்டுப்பாடுகளின் படி உடையணிந்துவராத பக்தர்கள் திருப்பியனுப்பப்படுவதில்லையென்றும் அவர் கூறினார்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளயின் இந்த உத்தரவு, அதனிடம் கேட்கப்பட்ட நிவாரணத்தைத் தாண்டியது என்கிறார் மூத்த வழக்கறிஞரான ராமலிங்கம்.

இதற்கிடையில், இந்த உடைக்கட்டுப்பாட்டு உத்தரவை அனைத்திந்திய மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் கடுமையாக எதிர்த்துள்ளன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வழிபாட்டு ஸ்தலங்களில் இதுவரை எங்கும் இதுபோன்ற உடைக்கட்டுப்பாடு இல்லாத சூழ்நிலையில், நீதிமன்றம் புதிதாக இம்முறையை புகுத்துவது அபாயகரமானது என்று நாங்கள் கருதுகிறோம் என அந்த அமைப்பு கூறியுள்ளது.

இது தொடர்பாக இந்து அறநிலையத் துறை ஆணயரின் கருத்தப்பெற செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை விரைவில் மேல் முறையீடு செய்யக்கூடும் என அந்தத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. -BBC

TAGS: