இந்திய மருத்துவத்தையும் யோகாவையும் இணைக்க வேண்டும்

மக்களின் ஆரோக்கிய மேம்பாட்டுக்காக, இந்திய மருத்துவத்தையும், யோகாவையும் இணைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

விவேகானந்தர் யோகா ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், “பன்னாட்டு யோகா ஆராய்ச்சி மற்றும் அதன் பயன்பாட்டு எல்லைகள்’ என்ற மாநாடு, பெங்களூரு நகர மாவட்டம், ஜிகினியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டை தொடக்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
பல்வேறு மருத்துவ முறைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க சுகாதார வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், அரசு அமைப்புகள் மற்றும் தொழில்துறையினர் பங்காற்ற வேண்டும். சுகாதாரப் பேணல் முறையில் இந்திய பாரம்பரிய மருத்துவத்தையும், யோகாவையும் இணைக்க அனைவரும் பாடுபடுவீர்கள் என நம்புகிறேன்.

என்னைப் பொருத்தவரை, பல்வேறு மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து, அதன் மீது கட்டமைக்கப்படுவதே சிறந்த, திறன்வாய்ந்த ஆரோக்கிய மேம்பாட்டு முறை ஆகும். நோய்களை எளிதில் கண்டறிய உதவுவதோடு, நவீனத் தொழில்நுட்ப உதவியால் ஆரோக்கிய மேம்பாட்டு பெற நவீன மருத்துவ முறைகள் உதவுகின்றன. மருத்துவம் மற்றும் தடுப்பூசிகளின் கண்டுபிடிப்பால் பல நோய்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்றுள்ளோம்.

நவீன மருத்துவம் சிக்கனமாக இல்லாததும், மருந்துகளின் வரம்புகள் மற்றும் அவற்றின் பக்க விளைவுகள் அதிகரித்துள்ளதாலும் பாரம்பரிய மருத்துவ முறைகள் பக்கம் கவனம் திரும்பியுள்ளது. இது இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் நிகழ்ந்துள்ள மாற்றமாகும். பாரம்பரிய மருத்துவத்தின் தேவை பெருகி வருகிறது. யோகா, உலகின் பாரம்பரியமாக மாறியுள்ளது. இந்தியாவின் பாரம்பரிய மருத்துவத்தை உலகம் ஆர்வத்தோடு தழுவத் தொடங்கியுள்ளது. தத்தமது வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்ள கலாசாரங்கள், பூகோள எல்லைகளைக் கடந்து பாரம்பரிய இந்திய மருத்துவத்தின் மகத்துவம் பிரபலமடைந்து வருகிறது.

தொற்றாத நோய்கள் மற்றும் மனநல நிலைகளால் 2030-ஆம் ஆண்டுக்குள் 4.58 லட்சம் கோடி அமெரிக்க டாலரை இந்தியா செலவழிக்க நேரிடும் என்று அண்மையில் எடுக்கப்பட்ட கணிப்பு தெரிவிக்கிறது. உடல் நலனைப் போலவே மனநலனையும் பேணிப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும். இங்குதான் யோகாவின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.

உலக அளவில் யோகா மூலம் வாழ்க்கையை மறுமலர்ச்சி ஆக்கிக் கொண்டவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. எதிர்கால மனித வாழ்க்கையின் அத்தியாவசியமாக யோகா மாறுவது உறுதி என்று மகான் அரவிந்தர் அன்று கூறியது நனவாகிவருகிறது. முழுமையான வாழ்க்கை முறை மற்றும் உடல், மனம், அறிவு, உணர்ச்சி, தார்மிக, ஆன்மிகத்துக்கு இடையிலான நல்லிணக்கம் என்பதால், ஆரம்பத்தில் யோகாக் கலையை நோய் தீர்க்கும் மருத்துவமாக யாரும் கருதவில்லை. ஆனால் யோகக் கலையின் மூலம் ஏராளமான சுகாதாரப் பயன்பாடுகள் குவிந்திருந்ததை காலப்போக்கில் உணரத் தொடங்கினர். மாறிவரும் உலகம் விவரிக்கும் சுகாதாரத்தை காக்கும் ஆற்றல் யோகாவிற்கு உள்ளது. நோய்களைத் தடுப்பதும், பராமரிப்பதும் மட்டுமல்ல, மனம், உடல் மற்றும் ஆன்மாவை சமநிலையில் வைத்திருக்கும் ஆரோக்கியமே ஆரோக்கிய மேம்பாடாகும் என்றார் மோடி.

-http://www.dinamani.com

TAGS: