டெல்லி: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை இந்தியா அழிக்க வேண்டும் என்று ட்விட்டரில் MyVote.Today@myvote_today நடத்திய கருத்து கணிப்பில் 57% ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படை தளத்துக்குள் நுழைந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. இதனைத் தொடந்து மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சமூக வலைதளமான ட்விட்டரில் MyVote.Today@myvote_today ஒரு கருத்து கணிப்பை நடத்தியது.
இதில் 4 ஆப்சன்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
1) பயங்கரவாத முகாம்களை அழித்தல்
2) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை யுத்தத்தின் மூலம் கைப்பற்றுதல்
3) பலூஸ் தனிநாட்டு போராட்டத்தை ஆதரித்தல்
4) தூதரக உறவுகளை துண்டித்தல் ஆகிய 4 ஆப்சன்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இதில் பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என 57% பாகிஸ்தான் ஆகிரமிப்பு காஷ்மீரை கைப்பற்ற வேண்டும் என 14% பலுசிஸ்தான் தனிநாட்டு போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என 19% தூதரக உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என 10% கருத்து தெரிவித்துள்ளனர். 24 மணிநேரத்தில் மொத்தம் 3,310 பேர் இக்கருத்து கணிப்பில் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்பாக MyVote.Today@myvote_today நடத்திய கருத்து கணிப்பில், எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் இருப்பது யார் என்ற கேள்விக்கு 2271 பேர் பதிலளித்திருந்தனர்.
இவர்களில் பாகிஸ்தான் அரசுதான் காரணம் என 6%; லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷியே முகமது, ஜமாத் உதவா ஆகியவை என 11%; பாகிஸ்தான் ராணுவம், உளவு அமைப்பு என 41%; இந்த 3 சக்திகளுமே காரணம் என 42% பேர் வாக்களித்திருக்கின்றனர்.
2015ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து MyVote.Today@myvote_today, நாள்தோறும் ட்விட்டரில் கருத்து கணிப்புகளை நடத்தி வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 2,000 முதல் 2,500 பேர் வரை இதில் பங்கேற்கின்றனர்.
இதில் அதிகபட்சமாக டிசம்பர் 23-ந் தேதியன்று நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 5320 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 81% பேர் தற்போதைய பிரதமர் மோடியே அடுத்த பிரமராகவும் வரவேண்டும் என கூறியிருந்தனர். அடுத்த பிரதமராக அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு 12%; ராகுல் காந்திக்கு 4%; நிதிஷ்குமாருக்கு 3% பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.