நியூயார்க்: பதன்கோட் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இருப்பதாக முன்னாள் சிஐஏ ஏஜெண்ட் ப்ரூஸ் ரீடெல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்திற்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அத்தனை பாதுகாப்பான விமானப்படை தளத்திற்குள் தீவிரவாதிகள் எப்படி எளிதில் நுழைந்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.
இந்நிலையில் பதன்கோட் தாக்குதல் பற்றி முன்னாள் சிஐஏ ஏஜெண்ட் ப்ரூஸ் ரீடெல் கூறுகையில், பதன்கோட் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள்ளது என்று எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
பிரதமர் மோடி திடீர் என்று கிறிஸ்துமஸ் அன்று பாகிஸ்தான் சென்று வந்தார். இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்பட்டு விடக் கூடாது என்று தான் ஐஎஸ்ஐ இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தியாவுடனான உறவு மேம்பட்டுவிடுமோ என்று கருதிய பாகிஸ்தான் ராணுவம் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை ஐஎஸ்ஐ மூலம் தூண்டிவிட்டு தாக்குதலை நடத்தியுள்ளது என்றார்.