மதக்கலவரத்தால் பற்றி எரியும் மேற்கு வங்கம்! காவல் நிலையங்கள் தீக்கிரை

west_bengalகொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் மதப்பிரச்சினையால் பற்றி எரிந்துகொண்டுள்ளது. காவல் நிலையங்களே அங்கு சூறையாடப்பட்டுவருகின்றன. முதல்வர் மம்தா பானர்ஜி உரிய நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதில் தோல்வியடைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உத்தர பிரதேச மாநில அமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆசம் கான், ஆர்எஸ்எஸ் அமைப்பினரை பார்த்து சர்ச்சைக்குறிய வகையில் கூறிய ஒரு வார்த்தை, இந்த மோதலுக்கு மூல காரணமாக கூறப்படுகிறது. ஆசம் கானுக்கு பதிலளிப்பதாக நினைத்துக்கொண்டு, முகமது நபியை அதே வார்த்தையால் சர்ச்சைக்குறிய வகையில் விமர்சனம் செய்துள்ளார் அகில் பாரதிய ஹிந்து மகாசபா தலைவர் கமலேஷ் திவாரி.

இது அன்ஜுமான் அக்லே சுன்னாதுல் ஜமாத் (ஏஜேஎஸ்) என்ற இஸ்லாமிய அமைப்பினருக்கு கோபத்தை வரவழைத்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய பேரணியின்போது, ஒரு காவல் நிலையம் முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டது. பல்வேறு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இன்றும்கூட, கலவரம் தொடருகிறது. இன்று, காளியாசாக் பகுதியில் காவல் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. 12க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளதாகவும், இந்துக்கள் உயிர் பயத்தில் இருப்பதாகவும், பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், 130 குற்றவாளிகளில் 9 பேரை மட்டுமே கைது செய்ததாகவும், அதிலும் 6 பேர் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாகவும் மம்தா மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மால்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், வன்முறைகள் தொடருவது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: